- செய்திகள், மாநிலச்செய்திகள்

பிரணாப் முகர்ஜியை பிரதமராக்கி இருந்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்திருக்காது

புதுடெல்லி, டிச. 16:-

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றபோது, மன்மோகன் சிங்குக்கு பதிலாக, பிரணாப் முகர்ஜியை பிரதமராக சோனியா தேர்ந்தெடுத்திருந்தால், காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து இருக்காது என்று சல்மான் குர்ஷித் தனது சுயசரிதைப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சல்மான் குர்ஷித். ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2-வது முறையாக ஆட்சி செய்தபோது இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட குர்ஷித் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். ‘தி அதர் சைட் ஆப் தி மவுன்டைன்’ (மலையின் மறுபக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகம், தனது சுயசரிதை மட்டும் அல்ல, ஐ.மு. கூட்டணி அரசின் முக்கிய தலைவர்களின் சுயசரிதையாகவும் இருக்கும் என்று குர்ஷித் தெரிவித்தார்.

இந்த புத்தகத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து அவர் கருத்து கூறியுள்ளார்.

இது பற்றி புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

நரசிம்ம ராவ் ஆட்சியின்போது (ஜூன் 1991 -மே  1996) நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட காரணமாக இருந்ததை நாடு கொண்டாடியது. இதை மறக்க முடியாது. ஆனால் 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்,  அவர் போட்டியிட்ட தெற்கு டெல்லித் தொகுதியில் தோல்வி அடைந்தார். அவரைத் தோற்கடித்தவரின் (விஜய் மல்கோத்ரா, பா.ஜ.க.) பெயரைக் கூட பலரும் அறிந்திருக்கவில்லை.

2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், ஐ.மு. கூட்டணியை வழிநடத்த பிரணாப் முகர்ஜியை தேர்ந்தெடுக்காமல், மன்மோகன் சிங்கை சோனியா காந்தி தேர்ந்தெடுத்தது காங்கிரஸ் கட்சியினருக்கு மட்டும் அல்ல, வெளியில் உள்ளவர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

2004-ம் ஆண்டில் இந்த தெரிவு வேறாக இருந்திருந்தால், பிரணாப் முகர்ஜியாக இருந்திருந்தால், 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்வியை தவிர்த்து இருக்கலாம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புத்தகத்தில் மன்மோகன் சிங் உடனான உறவு குறித்தும், மேலும் பல அரசியல் அனுபவங்களையும் சல்மான் குர்ஷித் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Leave a Reply