- சினிமா, செய்திகள், மாவட்டச்செய்திகள்

‘பிச்சைக்காரனு’க்கு எதிர்ப்பு வலுக்கிறது சர்ச்சைக்குரிய பாடலால் சலசலப்பு…

திரும்பவும் சர்ச்சைக்குரிய பாடல் ஒன்று யூ டியூபில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்களுக்குள்ளாகி இருக்கிறது.

இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்து தயாரித்துள்ள, ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்துக்காகப் பதிவு செய்துள்ள, ‘‘கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்…’’ என்ற பாடல்தான் பீப் பாடலுக்குப் பிறகு பலரது எதிர்ப்பை பெற்றிருக்கிறது.

இடஒதுக்கீட்டுக்கு எதிரானதாகவும் இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்து படித்து பட்டம் பெற்று பணியாற்றும் தலித்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாகவும் இந்தப் பாடல் அமைந்துள்ளதாக கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சம்பந்தப்பட்ட பாடலுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான் தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்'' என்ற பாடல் வரிகள், இட ஒதுக்கீடு மூலம் படித்த டாக்டர்களை மிகவும் மோசமாக சித்திரிக்கிறது.

அந்த டாக்டர்கள் தப்பு தப்பா ஊசிபோட்டு நோயாளிகளைக் கொல்கிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, விஷமத்தனமானது. இட ஒதுக்கீட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. இட ஒதுக்கீடு, தகுதி மற்றும் திறமையை பாதித்து விடுகிறது என்ற தவறான உளுத்துப்போன வாதத்தை மீண்டும் மீண்டும் முன் வைக்கும் முயற்சியாகும்.

தமிழகத்தில் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தற்போது 69 சதவிகித விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தமிழகம் மருத்துவத் துறையில் முன்னேறி உள்ளது. இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக சென்னை உள்ளது.

சென்னையிலும் தமிழகத்திலும் தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் பெரும்பாலும் இடஒதுக்கீட்டின் மூலம் பயின்றவர்கள்தான். அவர்களது திறமையை உலகமே போற்றுகிறது, பாராட்டுகிறது. உண்மை நிலை இவ்வாறு இருக்க, இட ஒதுக்கீட்டின் மூலம் டாக்டர்களானவர்களால் நோயாளிகள் இறப்பதாகக் கூறுவது இத் திரைப்படக் குழுவினரின் வக்கிரமான சாதி மேலாதிக்க உணர்வைத்தான் பிரதிபலிக்கிறது.

எனவே, உண்மைக்கு மாறாக திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மருத்துவர்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. இந்தப் பாடலுக்கு உடனடியாகத் தடை விதிப்பதோடு, இந்தத் திரைப்படக் குழுவினர் மீது, குறிப்பாக பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது சாதிய ரீதியிலான வெறுப்பைத் தூண்டுவதற்காகவும் ஒடுக்கப்பட்டோரை இழிவுபடுத்துவதற்காகவும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவிஞர் சுகிர்தராணி, ‘‘இட ஒதுக்கீடு உரிமையை இழிவுபடுத்தும் நோக்கில் ஒரு பாடலை உருவாக்கி, அந்தப் பாடலை இயற்றியவர், ‘நானே ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவன்தான்’ என்று சொல்வது வெட்கக்கேடானது. இடஒதுக்கீட்டில் படித்து பணி பெறுவோர் எவரும் திறமையற்றவர்கள் அல்ல என்பதை முதலில் அறிந்துகொள்வது அவசியம் ஆகும். பொதுப் போட்டியாளர்களுக்கும் இட ஒதுக்கீட்டில் தேர்வாகிறவர்களுக்கும் உள்ள மதிப்பெண் வித்தியாசம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது.

மேலும், இடஒதுக்கீட்டுக்குக்கூட குறிப்பிட்ட அளவு மதிப்பெண் வரையறுக்கப்பட்டுள்ளது. நன்கு படித்த திறமையுள்ளவர்கள்தான் அந்த வரையறையைத் தொட்டு தேர்வாக முடியும். எனவே, சம்பந்தப்பட்ட பாடல் அர்த்தப்படுத்துவது போல திறமையற்ற எவரும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வாகிவிடவில்லை.

கடினமான போட்டிகள், பெரும் சிரமங்களுக்கிடையேதான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அடித்தட்டு மக்கள் பெற்று மேலெழுகிறார்கள். அப்படி வந்தவர்கள், தான் போதிக்கும் கல்வியையும் செய்யும் பணியையும் ஒரு அர்ப்பணிப்பு அடிப்படையில்தான் செய்கிறார்கள். இதற்கு முன்னுதாரணமாக பல முன்னோடிகளை மேற்கோள் காட்ட முடியும்.

சம்பந்தப்பட்ட அந்தப் பாடலில் உள்ள ஆட்சேபனைக்குரிய பாடல் வரிகள் முழுவதையும் உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கவில்லை எனில் பாடலாசிரியர், இசையமைப்பாளர் மீது சட்டப்படி புகார் அளிப்பதோடு அவர்களுக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்படும். இவ்வாறான செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’’ என்று ஆவேசமாகக் கூறினார்.

சர்ச்சைக்குரிய பாடலை எழுதிய பாடலாசிரியர் லோகன், ‘‘சார், முதல்ல ஒரு விஷயத்தை இங்கே பதிவு பண்ணிடுறேன். நானும் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவன்தான். நாட்ல  நடக்காதது எதையும் நான் எழுதல. உயிர் காக்கும் கடவுள்களான டாக்டர்கள் எல்லோரையும் நான் குறை சொல்லல. சில இடங்களில் மக்களிடம் இருந்து பணம் பிடுங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்படுகிற டாக்டர்களைத்தான் நான் குறிப்பிடுகிறேன். ஒண்ணுமேயில்லாத விஷயத்துக்கெல்லாம் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட்னு பணத்தை பிடுங்கி பரிதவிக்கவிட்ட அனுபவம் எனக்கே இருக்கு. அதனால்தான் அப்படி எழுதினேன். எந்த எதிர்ப்பு வந்தாலும் அந்த வரிகளை நீக்கறதா இல்ல’’ என்றார் உறுதியாக.

சர்ச்சைகளை உருவாக்கி விளம்பரம் தேடிக் கொள்வது தொடர்கதையாக இருக்கிறது.

Leave a Reply