- செய்திகள்

பா.ஜனதா தலைவர், காங்கிரஸ் கொடி ஏந்தியதால் பரபரப்பு சுதந்திர தின விழா ஊர்வலத்தில்…

போபால், ஆக.17-

மத்திய பிரதேச மாநில மூத்த தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான பாபுலால் கவுர், போபாலில் சுதந்திர தினத்தையொட்டி நடந்த ஊர்வலம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் காங்கிரஸ் கொடியை ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆரிப் அகீல் இது பற்றி கூறும்போது, ‘‘கவுர் சாகேப்புக்கு பா.ஜனதா கட்சியிடம் கோபம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் பா.ஜனதாவின் மூத்த தலைவர். யாராவது அவரிடம் காங்கிரஸ் கொடியை கொடுத்து இருக்கலாம்’’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘ஒரு வேளை அவர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசுக்கு வந்தால் அவரை கட்சி திறந்த மனதுடன் வரவேற்கும்’’ என்றும் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த கவுர், ‘‘சுதந்திர போராட்ட வீரர் என்ற வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக’’ கூறினார்.

‘‘நிகழ்ச்சியின்போது ஒருவர் என்னிடம் கொடியைத் தந்தார். அது எனது கட்சிக்கொடி அல்ல என்று கவனித்தவுடனேயே, அதைத் திரும்பிக்கொடுத்துவிட்டேன். பா.ஜனதாவை விட்டு நான் ஒருபோதும் விலக மாட்டேன்’’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply