- செய்திகள், விளையாட்டு

பார்சிலோனாவை ‘வெளியேற்றியது’ அட்லெட்டிகோ மாட்ரிட்

மாட்ரிட், ஏப். 15:-

சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் இருந்து வலிமை மிகுந்த பார்சிலோனா அணியை வெளியேற்றியது அட்லெட்டிகோ மாட்ரிட் அணி.

மாட்ரிட் நகரில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் துரத்தியது அட்லெட்டிகோ மாட்ரிட் அணி.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. லீக்சுற்றில் 39 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத பார்சிலோனா ஏற்கெனவே 3 காலிறுதியில் தோல்வி அடைந்து விரக்தியின் உச்சத்தில் இருந்தது. இந்தநிலையில் 4-வது காலிறுதியில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணியுடன் பார்சிலோனா அணி நேற்று மோதியது. 55 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் பரபரப்புடன் ஆட்டம் நடந்தது.

தொடக்கத்தில் இருந்தே அட்லெட்டிகோ அணியின் ஆதிக்கமே இருந்தது. அதற்கு ஏற்றார் போல் 36-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் அன்டோய்னி கிரீஸ்மான் முதல் கோல் அடித்து முதல்பாதியில் முன்னிலை பெறவைத்தார்.

2-வது பாதியிலும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி, லூயிஸ் சுராஸ், நெய்மார் கடுமையாகப் போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.  88-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திய கீரீஸ்மான் 2-வது கோல் அடித்தார். இறுதிவரை கோல் அடிக்க முடியாத பார்சிலோனா அணி தோல்விகண்டது.

இதையடுத்து, அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் முனிச் ஆகிய அணிகளுடன் இணைந்து போட்டியை எதிர்கொள்கிறது அட்லெட்டிகோ மாட்ரிட் அணி.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணியை எதிர்த்து பென்பிகா அணி  மோதியது. இந்த ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற சமனிலையில்  இருந்தன. இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் பென்பிகா அணியை 2-3  என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது பேயர்ன் முனிச் அணி.

Leave a Reply