- செய்திகள்

பாம்பன் ரெயில் நிலையத்தில் ரூ.35 கோடியில் புதிய தூக்குப்பாலம் அக்டோபரில் பணி தொடக்கம்…

ராமேஸ்வரம், ஆக. 18-

பாம்பல் ரெயில் பாலத்தில் ரூ.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள தூக்குப்பால பணிகள் அக்டோபர் மாதத்தில் தொடங்குகிறது.

பாம்பன் பாலம்

ராமேஸ்வரம் தீவு பகுதியையும், மண்டபத்தையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரெயில் பாலம் உள்ளது. கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள 146 தூண்கள் இந்த பாலத்தை தாங்கி நிற்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம், கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தூக்குப்பாலமாக அமைக்கப்பட்டு உள்ளது. மேற்கு, கிழக்கு பகுதி கடலுக்கு கப்பல்கள் செல்லும்போது இந்த தூக்குப்பாலம் திறக்கப்படும். இந்த பாலத்தை மின்மோட்டார் மூலம் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிகாரி ஆய்வு

இந்நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கர்தாம், தெற்கு ரெயில்வே தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர். பாம்பன் சாலை பாலத்தில் நின்று கொண்டு ரெயில் தூக்குப்பாலத்தை திறக்க வைத்து பார்வையிட்டனர். அப்போது பாலத்தின் தன்மை குறித்தும், பாலத்தின் வரைபடங்களையும் பார்வையிட்டனர்.

ஆய்விற்கு பின்பு ரெயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் ஆர்.கே.கர்தாம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மனித சக்தியால் திறந்து மூடும் வகையில் பாம்பன் பாலத்தில் உள்ள தூக்குப்பாலம் அகற்றப்பட்டு மின் மோட்டாரில் இயங்கும் புதிய தூக்குப் பாலம் கட்டப்படவுள்ளது. பாலத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தூக்குப்பாலம்

பின்னர் தெற்கு ரெயில்வே பாலங்களின் தலைமை பொறியாளர் சுயம்புலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-பாம்பன் ரெயில்வே பாலத்தில் ரூ.6 கோடி மதிப்பில் 27 கர்டர்கள் புதிதாக பொருத்தப்பட உள்ளது. அரக்கோணத்தில் கர்டர்கள் தயாராகி வருகின்றன. 27 கர்டர்கள் பொருத்தும் பணிகள் முடிந்து விட்டால் இன்னும் 10 வருடங்களுக்கு பாலத்தில் எந்த கர்டரையும் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. பாலம் மிகவும் உறுதியானதாகவே இருக்கும். அதேபோல் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே கப்பல்கள் செல்லும் நிலையில், மனித சக்தியால் திறந்து மூடப்பட்டு வரும் பாலத்தின் மைய பகுதியல் உள்ள ஸெர்சர் தூக்குப்பாலத்தை அகற்றிவிட்டு ரூ.35 கோடி மதிப்பில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப் பாலம் கட்டப்பட உள்ளது.

அக்டோபரில் பணி தொடக்கம்

இதற்கான கர்டர்கள் கட்டப்பட்டு அக்டோபர் மாதத்தில் பணிகள் தொடங்கப்படும்.சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு பாம்பன் கடல் வழியாக நிறைவேற்ற முடிவு செய்யும் பட்சத்தில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் தான் கட்ட வேண்டி வரும். புதிய பாலம் கட்ட வேண்டும் என்றால் சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஆகும். அதன்படி பாம்பன் ரெயில் பாலத்தை கடலுக்குள் அமைக்கவோ அல்லது கடலில் இருந்து அதிக உயரத்தில் பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து ரெயில்வே அதிகாரியிடம் அளிக்கப்பட்டு உள்ளது.தற்போது பயன்பாட்டில் உள்ள தூக்குப் பாலத்தின் பாதுகாப்பு கருதியும், உறுதி தன்மையை அதிகரிப்பதற்காகவும் இரும்பினால் ஆன தகடுகள் பொருத்தப்பட்டு 6 டன் எடை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply