- சினிமா, சினிமா துளிகள், செய்திகள்

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து மரணம் உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த

சென்னை, மார்ச்-1

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலி ெசலுத்தினார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சங்கத்தலைவர் நாசர்,  துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் நிர்வாகிகள் குமரிமுத்துவின் உடலுக்கு  இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ மனையில் ஆஞ்சியோகிராம் செய்து கொண்ட குமரிமுத்து, சில நாட்களில் உடல்நலம் பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு மரணம்  அடைந்தார்.

சினிமா-அரசியல்

மேடை நாடகங்களில் நடித்து வந்த குமரிமுத்து 1978-ம் ஆண்டு `இவள் ஒரு சீதை' என்ற படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ஊமை விழிகள், கைகொடுக்கும் கை, சின்னப்பூவே மெல்லப்பேசு, புதுவசந்தம், வில்லு உள்பட ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களும் அடங்கும். நகைச்சுவை நடிப்பில் புகழ் பெற்றதோடு தனது முத்திரை சிரிப்பு மூலமும் ரசிகர்களை கவர்ந்தார்.  சினிமாவில் வளர்ந்த நேரத்தில் அரசியலிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு  மேடைப் பேச்சாளராகவும் வலம் வந்தார்.

நடிகர் சங்க கட்டிட பிரச்சினை ஏற்பட்டபோது முந்தைய நிர்வாகத்துக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் இவர்.
நடிகர் சங்கம் இரங்கல்

குமரிமுத்துவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை வருமாறு.

தனது நடிப்பாலும் மறக்க முடியாத தனிப்பட்ட சிரிப்பாலும் நம்மோடு பயணித்த அண்ணன் குமரிமுத்து இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அதற்காக மனம் வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் உற்றார்க்கும் சுற்றத்தார்க்கும் எங்கள் ஆறுதலை சமர்ப்பிக்கிறோம். இந்த நேரத்தில் அவர் நடிகர் சங்கத்துக்கு ஆற்றிய அரும்பணிகளையும். சங்க நல
னுக்காக குரல் கொடுத்து போராடியதையும் நியமன செயற்குழு உறுப்பினராக எங்களோடு செயல்பட்டு முன்னேற்றத்துக்கான பல்வேறு யோசனைகளை சமீப காலம் வரையிலும் வழங்கியதையும் நன்றியுடன் நினைவு கூருகிறோம். நிறைவு செய்யமுடியத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கும் அவர், சங்கத்துக்காக கண்ட கனவுகளை நனவாக்குவது ஒன்றே அவர் ஆத்துமாவுக்கு செலுத்துகிற மலர் வளையமாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி இரங்கல்

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் குமரிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.

குமரிமுத்து மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–-

தி.மு.க.வின்  கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் துணைத் தலைவரும், சிறந்த நகைச்சுவைப்  பேச்சாளரும், குணச்சித்திர நடிகருமான குமரிமுத்து மறைந்து விட்டார் என்ற  செய்தி அறிந்து திடுக்கிட்டேன். இவருடைய சிரிப்பே இவரது புகழை  அதிகப்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை  வெளிப்படுத்தியதால் `கலைமாமணி', `கலைச் செல்வம்' ஆகிய விருதுகளைப்  பெற்றவர். பகுத்தறிவுப் பாசறையாம் திராவிடர் கழகம் இவருக்கு `பெரியார்  விருது' வழங்கி கவுரவித்துள்ளது. குமரிமுத்துவின் மறைவினால் வருந்தும்  அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், கழக உடன் பிறப்புகளுக்கும்  என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மு.க. ஸ்டாலின்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–-

கலையுலகில்  கழகத்தின் கொள்கை முழக்கமாக விளங்கிய நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின்  மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. தனது அதிர்வேட்டுச் சிரிப்பால்  நம்மையெல்லாம் ஈர்த்த அவர் இன்று இல்லை என்கிற செய்தி அதிர்ச்சியையும்  வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கும் அவரது திரையுலக  நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நகைச்சுவை  முரசாக ஒலித்த நடிகர் குமரிமுத்துவின் சிரிப்பும் சிந்தனையும் நம்  கழகத்தின் பயணத்தில் என்றும் துணை நிற்கும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

குடும்பம்

குமரிமுத்துவன் மனைவி பெயர் புண்ணியவதி. இந்த தம்பதிகளுக்கு செல்வ புஷ்பா, எலிசபெத் மேரி, கவிதா என்ற மகள்களும், ஐசக் மாதவராஜன் என்ற மகனும் உள்ளனர்.

Leave a Reply