- செய்திகள்

பலத்த மழையில் பாலம் இடிந்தது குன்னூர் பகுதியில்…

குன்னூர், ஜூலை.28-

குன்னூர் பகுதியில் பெய்த பலத்த மழையில் பாலம் இடிந்து விழுந்தது.

கனமழை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குன்னூர், கூடலூர், வண்டி சோலை, ஓட்டுப்பட்டறை உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்தது. நேற்று முன்தினமும் இரவு முழுவதும் பெய்தது. இந்த கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பாலம் இடிந்து விழுந்தது

தொடர்ந்து பெய்த கன மழையால் குன்னூரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. குன்னூர் பழைய ஆஸ்பத்திரி லைன் பகுதியையும், மாதர்ஸ் ஹவுஸ் பகுதியையும் இணைக்கும் வகையில் சுமார் 40 அடி நீளமுள்ள பாலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கும் பயன்பட்டு வந்தது.

இந்த நிலையில் கனமழையால் நேற்று காலை 7.45 மணியளவில் திடீரென இந்த பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. அந்த சமயத்தில் பாலத்தில் பொதுமக்கள் யாரும் செல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

பாலம் இடிந்து விழுந்தது பற்றி தகவல் கிடைத்ததும் குன்னூர் நகராட்சி தலைவர் சரவணகுமார், ஆணையர் (பொறுப்பு) மகேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply