- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

பரீட்சைக்கு ஏன் படிக்கவில்லை என்று அப்பா தட்டிக்கேட்டதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

சென்னை, ஏப்.1-
சென்னையில், பரீட்சைக்கு ஏன் படிக்கவில்லை என்று அப்பா தட்டிக்கேட்டதால் வேதனையடைந்த 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதில் மனம் உடைந்த தாயும் தூக்கில் தொங்கினார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

10-வது வகுப்பு மாணவி

விருகம்பாக்கம்  சேக் அப்துல்லா நகர் பவானி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. சினிமா  நடிகர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி  கவிதா (வயது 33). இந்த தம்பதிக்கு ராஜேஸ்வரி (15) மற்றும் 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ராஜேஸ்வரி தனியார் பள்ளியில் 10-வது வகுப்பு படித்து வந்தார்.
எஸ்.எஸ்.எல்.சி.  தேர்வு நடந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக ராஜேஸ்வரி  டியூசனுக்கு செல்லவில்லை. இதனால் பாலசுப்பிரமணி, மகள் ராஜேஸ்வரியை நேற்று  கண்டித்துவிட்டு, வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தாய் மகள் தற்கொலை

வீட்டில்  கவிதாவும், ராஜேஸ்வரியும் மட்டும்தான் இருந்தனர். அப்பா திட்டியதால் மனம்  உடைந்த ராஜேஸ்வரி வீட்டின் படுக்கை அறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை  செய்து கொண்டார்.
மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு மனமுடைந்த தாயார் கவிதா வீட்டின் மற்றொரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இவர்களது வீடு முதல் மாடியில் உள்ளது.
இந்தநிலையில் விளையாட சென்ற  மற்றொரு மகள் வீடு திரும்பியபோது அம்மாவும், அக்காவும் தூக்கில் தொங்குவதை  கண்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இது குறித்து  விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி  விரைந்து சென்று கவிதா, ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply