- அரசியல் செய்திகள், சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது

புதுடெல்லி, பிப்.22-

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. பல்கலைக்கழக மாணவர் போராட்டம், ஜாட் இனத்தவர் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

மோடி முயற்சி

ஏற்கனவே நடந்து முடிந்த மழைக்கால மற்றும் குளிர் கால நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் எதிர்க்கட்சியினர் அமளியினால் முடக்கப்பட்டன. இதனால், ஜி.எஸ்.டி. மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.

அதைத் தொடர்ந்து, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசு பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, முதல் முறையாக இது தொடர்பாக அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி ஒத்துழைப்பு கோரி இருந்தார்.

ஹமீது அன்சாரி

இதேபோல், குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஹமீது அன்சாரியும் கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவதற்காக முதல் முறையாக அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நேற்று முன்தினம் கூட்டி இருந்தார்.

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோரும் இன்று அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட இருக்கிறார்கள்.

புயலைக் கிளப்ப திட்டம்

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், சபையை அமைதியாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டபோதும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளில் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

ஜாட் போராட்டம்

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் வெமுலா ரோகித் தற்கொலை விவகாரம், பதான்கோட் தாக்குதல், தற்போது நடைபெற்று வரும் ஜாட் இன மக்களின் இட ஒதுக்கீடு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட இருக்கின்றன.

மத்திய அரசைப் பொறுத்தவரை, எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது குறித்து விவாதம் நடத்த தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பல முக்கிய மசோதாக்களை இந்த தொடரின்போது நிறைவேற்றுவதிலும் முனைப்புடன் உள்ளது.

ஜி.எஸ்.டி. மசோதா

ஜி.எஸ்.டி. வரி மசோதா, லோக்பால் (திருத்த) மசோதா உள்ளிட்ட 16 சட்ட மசோதாக்கள் தற்போது நிலுவையில் (மக்களவையில் 5, மாநிலங்களவையில் 11) உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதாக்களை இந்த தொடரில் நிறைவேற்ற அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

29-ந்தேதி பொது பட்ஜெட்

நாளை தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 29-ந்தேதி அன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக 25-ந்தேதி ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 16-ந்தேதி முடிவடையும். 2-வது கட்ட கூட்டத் தொடர் ஏப்ரல் 25-ந்தேதி முதல் மே 13-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

Leave a Reply