- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

பனை ஓலை விசிறி செய்யும் பணி தீவிரம் கோடையில் குளிர்விக்கும்

திருத்தணி, ஏப்.4-
திருத்தணி அடுத்த வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தில் கோடையை சமாளிக்க பனை ஓலை விசிறி செய்யும் பணியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
பருவமழை அதிகமாக பொய்த்ததால் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. திருத்தணியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, கோடைவெயில் கொளுத்தி வருகிறது. தினமும், செஞ்சுரி அடிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க முடியாமல், பொதுமக்கள் திண்டாடிவருகின்றனர்.
கோடை வெயில் ஒருபுறம் இருக்க, அவ்வப்போது மின்வெட்டு மக்களை மேலும் உஷ்ணப்படுத்துகிறது. இந்நிலையில், கோடையில் ஜில்லுனு காற்று தரும், பனை ஓலை விசிறியின் விற்பனையால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
பனை ஒலை விசிறி
கோடைக்காலத்திற்கு முன்னதாகவே தொடர்ந்து பனை ஓலை விசிறி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள திருத்தணி ஒன்றியம், சிறுகுமி ஊராட்சி வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் 100-க்கும் மேற்ப்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வி.ஜி.ஆர்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த பெண்மணி அஞ்சேரி கூறுகையில், சிறிய பனை மரத்தில் மட்டைகளை வெட்டி, 2 நாட்கள் படிய வைத்து பின், பனை ஓலை விசிறிகள் தயார் செய்கிறேன்.
100 விசிறிகள் தயாரிப்பு
ஆயிரம் விசிறிகள் செய்ய வண்ணம்பூச எங்களுக்கு 1200 ரூபாய் செலவாகிறது. அப்படி தயார் செய்கின்ற விசிறிகள் திருத்தணி, ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதியில் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே திருவள்ளூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சென்று அங்கு கடைகளில் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம்.
ஒருநாளைக்கு 100 விசிறிகள் வீதம் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து தயார் செய்கிறாம். இத்தொழிலால் எங்களுக்கு ஜூலை மாதம் வரை பணத்தேவை ஓரளவுக்கு பூர்த்தியாகும். பின்னர் மழை காலங்களில் கிராமங்களில் நடக்கும் 100 நாள் வேலை செய்து வருகிறோம் என்றார் அவர்.

Leave a Reply