- உலகச்செய்திகள், செய்திகள்

பனாமா பேப்பர்ஸ் வெளியீடு எதிரொலி பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்து 4 ஆண்டுகளில் இருமடங்கு அதிகரிப்பு

இஸ்லாமாபாத், ஏப். 23:-

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 2015-ம் ஆண்டு கணக்கின்படி, ரூ. 200 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்குள் நவாஸின் சொத்துக்கள் 100 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், நவாஸ் ஷெரீப்புக்கு வெளிநாடுகளில் எந்தவிதமான சொத்துக்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனாமா பேப்பர்ஸ் ரகசிய ஆவணங்களில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகன், மகள் பெயர் இடம்பெற்றிருந்தது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யத்தொடங்கின. இதையடுத்து, அந்நாட்டு தேர்தல் ஆணையம் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டில் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக்கள் மதிப்பு ரூ.16.60 கோடியாக இருந்தது. 2012-ல் ரூ.26.16 கோடியாகவும், 2013-ல் ரூ. 182 கோடியாகவும் உயர்ந்துள்ளது. பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு சொந்தமாக ஒரு டொயோட்டா லான்ட் க்ரூசியர் காரும், 2 பென்ஸ் கார்களும் உள்ளன. தனது தாய்க்கு சொந்தமான வீட்டில் நவாஸ் ஷெரீப் இப்போதும் வசித்து வருகிறார். மேலும், அவருக்கு சொந்தமாக வேளாண் நிலங்களும், பல்வேறு தொழில்துறையில் கோடிக்கணக்கில் முதலீடுகளும் உள்ளன. ரூ.2 லட்சம் மதிப்பிலான வீட்டு வளர்ப்பு பிராணிகளும் நவாஸிடம் இருக்கின்றன.

நவாஸ் மனைவி குல்சூம் நவாஸுக்கு ரூ.8 கோடி மதிப்பில் அபோதாபாத்தில் ஒரு மாளிகையும், ரூ.10 கோடி மதிப்பில் முர்ரீ நகரில் ஒரு சொகுசு பங்களாகவும் இருக்கிறது. நவாஸ் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோர் வெளிநாடுகளில் வசித்து வருவதால் அவர்களின் சொத்து குறித்து குறிப்பிடப்படவில்லை.

நவாஸ் ஷெரீப் மருமகன் ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் முகமது சப்தாருக்கு சொந்தமாக 550 கிராம் நகைகளும், ஒரு வீடும், ஒரு பி.எம்.டிபிள்யு காரும் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply