BREAKING NEWS

பதினெட்டாம் படியேறிய வழக்கு முதல் படிக்கு இறங்குகிறதா?

புனிதம் என்பது பெரிதும் மதவுணர்வு சார்ந்ததொரு சொல்தான்.  ஆயினும் அந்தச் சொல்லையே இங்கே பயன்படுத்த வேண்டியுள்ளது.  உரிமை, நம்பிக்கை இரண்டில் எது புனிதமானது என்றால் உரிமைதான் என்று உரக்கச் சொல்லலாம்.. இந்தியாவின் பெருமைக்குரிய அரசமைப்பு சாசனம் அடிப்படையான மனித உரிமைகளை உயர்த்திப் பிடிக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு அளித்தது. தீர்ப்பைப் பயன்படுத்திக் கோயிலுக்கு வர முயன்ற குறிப்பிட்ட வயதுக் கட்டத்திற்குள் உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பளிக்க நடவடிக்கை எடுத்தது பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம். பாஜக-வினர் இதை அந்த மாநிலத்தில் தங்கள் கடையை அகலத் திறப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திப் பிரச்சினையாக்கினார்கள். பக்தி, பாரம்பரியம், நம்பிக்கை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வன்முறைக் கும்பல்கள் இறக்கிவிடப்பட்டன. அதன் பின்னணியில் இருந்தது அரசியல் ஆதிக்க நோக்கம் மட்டுமல்ல, ஆணாதிக்க வன்மமும்தான்.

தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை விசாரித்த தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்ட தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 3:2 என்ற பெரும்பான்மை விகிதத்தில், இது பற்றித் தொடர்ந்து விசாரித்து தீர்ப்பளிக்கும் பொறுப்பை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியுள்ளது. 3 நீதிபதிகளின் தீர்ப்புடன் மற்ற இரண்டு நீதிபதிகள் உடன்படவில்லை. இது தொடர்பாக உரிமைக்கும், நம்பிக்கைக்குமான இரு தரப்பாரின் வாதங்கள் முந்தைய தீர்ப்பு வந்த நேரத்திலும் எழுந்தன, இப்போதும் எழுகின்றன. வழிபாட்டு உரிமை உள்ளிட்ட மனித உரிமைகள் மிக அடிப்படையானவை, எந்தக் காரணத்துக்காகவும் மீறப்பட முடியாதவை என்ற குரலும் உரக்க ஒலிக்கிறது, மத மரபுகளில் மனித உரிமைச் சட்டங்கள் குறுக்கிட முடியாது என்ற வாதமும் எழுகிறது.

மத நம்பிக்கைகளில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக்கூடாது என்கிறார்கள். மதம் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறதா? மரபு, நம்பிக்கை என்ற பெயர்களில் மாற்றங்களைத் தடுத்துக்கொண்டே இருக்க முடியுமா? எடுத்துக்காட்டாக மதக்கோட்பாட்டின்படி பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலம் கடந்துவிடவில்லையா? பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்றிருந்த விதிகள் மாறவில்லையா? கணவன் இறந்த பின் மனைவியையும் சேர்த்து உயிரோடு கொளுத்தி உடன்கட்டை ஏற்றிய பழக்கம் கைவிடப்படவில்லையா?

சபரிமலையில் பெண்களின் வழிபாட்டு உரிமைக்காக வழக்குத் தொடுத்தவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவருக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பதாக ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். அப்படியானால்  பெண்களின்  உரிமையை அங்கீகரித்துத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் உள்நோக்கம் இருக்கிறதா? வழக்குத் தொடுத்தது இளம் வழக்குரைஞர்கள் சங்கம். இந்துக்கள் உள்பட எல்லா மதத்தினரும் உறுப்பினராக உள்ள அந்த அமைப்பின் தலைவராக அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருநதவர் அவர். இந்து, கிறிஸ்துவர், சீக்கியர், பார்ஸி என யார் தலைவர் பொறுப்பில் இருந்தாலும் – ஏன் மதங்களை ஏற்காத ஒருவர் கூட  –  அவர் அமைப்பின் சார்பில் வழக்குத் தொடுப்பார். அதற்கு மதச்சாயம் பூசுவது, ஒரு திரைப்படத்தில் அரசாங்கத்தையோ பழமைவாதங்களையோ விமர்சிக்கிற வசனம் வந்தால் கூட அதில் நடித்த நடிகரின் மதத்தைக் கண்டுபிடித்து “நீ எப்படி இதைப் படத்தில் பேசலாம்” என்று சிலர் கேட்டதைப் போன்றதல்லவா? எழுப்பப்படும் பிரச்சினை பற்றிப் பேசாமல் எழுப்பியவரின் மதத்தைப் பிரச்சினையாக்குவது நெறியற்ற செயல்.

 

 

தற்போதைய விவாதங்களில் பாஜக-வினரும் பாஜக ஆதரவு “நடுநிலை” விமர்சகர்களும் (!) கேரளத்தில் சிரியன் கத்தோலிக்க தேவாலயம் தொடர்பான வழக்கைப் புதிய ஆயுதமாகத் தூக்கி வந்தார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பினராயி விஜயன் அரசாங்கம் செயல்படுத்த மறுத்ததாகவும், ஒவ்வொரு மதத்திற்கு ஒரு அணுகுமுறையைக் கையாள்வதாகவும், இது வாக்கு வங்கி அரசியல் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், ‘மலங்கரா தேவாலய விவகாரம்’ என்றறியப்பட்ட அந்த வழக்கு கிறிஸ்துவர்களின் நம்பிக்கை, வழிபாட்டு உரிமை தொடர்பானது அல்ல. தேவாலய நிர்வாக அதிகாரம் யாருக்கு என்ற ஒரு சொத்துக் கட்டுப்பாட்டு வழக்கு அது. அந்த வழக்கிலும் பின்னர் காவல்துறை துணையோடு நீதிமன்ற ஆணை செயல்படுத்தப்பட்டு, உரிய பிரிவினரிடம் நிர்வாக அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அந்த நிர்வாக அதிகார வழக்கையும், வழிபாட்டு உரிமை வழக்கையும் ஒன்றாகச் சித்திரிப்பதுதான் அப்பட்டமான வாக்கு வங்கி அரசியல்.

வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட விரிந்த அமர்வுக்கு மாற்றிய முடிவோடு உடன்படாத இரண்டு நீதிபதிகளில் ஒருவர், சென்ற ஆண்டு கேரளத்தில் தீர்ப்புக்கு எதிராகப் புழுதி கிளப்பப்பட்டதை விமர்சித்திருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்பை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், ஆனால், அதை வைத்து அரசியல் பிரச்சினையாகவும் வன்முறைக் களமாகவும் மாற்ற முயன்றதை ஏற்பதற்கில்லை என்று கூறியிருக்கிறார்.

முந்தைய தீர்ப்பைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறபோது மக்களிடையே அது பற்றி விரிவாகக் கொண்டு சென்றிருக்க வேண்டும், தீர்ப்பு பற்றியும் உரிமைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும், படிப்படியான மாற்றங்களோடும் மக்கள் ஆதரவோடும் செயல்படுத்தியிருக்க வேண்டும் என்ற கருத்துகளைச் சிலர் முன்வைக்கிறார்கள். அந்தக் கருத்துகள் ஏற்கத்தக்கவைதான். ஆனால், பினராயி அரசு அந்தத் தீர்ப்பு வந்ததும் பெண்களெல்லாம் கோயிலுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கவில்லை. நீதிமன்றத் தீர்ப்பே கூட பெண்களெல்லாம் அந்தக் கோயிலுக்குப் போங்கள் என்பதல்ல. அங்கே போக விரும்புகிற பெண்களுக்கு அந்த வாய்ப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தீர்ப்பு. அதைத்தான் அன்று பினராயி அரசாங்கம் செய்தது.

இப்படி அந்தப் பெண்களின உரிமைக்காக நிற்பதைக் கூட வாக்கு அரசியல் என்று கூசாமல் கொச்சைப்படுத்துகிறார்கள். ஒரு வாத நியாய அடிப்படையில் ஒரு கேள்வியை வைக்கலாம் – வாக்குகளைத் திரட்டுவதுதான் நோக்கம் என்றால், பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களிடையே ஏற்படுத்தப்பட்டிருககிற உணர்வுக்கு சாதகமாக நடந்துகொள்வதுதானே அரசியல் ஆதாயமாக மாறும்? அதற்கு மாறுபட்ட நிலைப்பாடு எப்படி வாக்குகளை அள்ளித்தரும்? ஆகவே, இது கொள்கை அரசியல்தானேயன்றி வாக்கு அரசியல் அல்ல.

வழக்கம்போல, மனித உரிமைகளுக்காக வாதாடுவோருக்கு “இந்துக்களின் விரோதிகள்” என்று அடையாள வில்லையை மாட்டிவிடுகிறார்கள். இந்துக்கள் என்றால் ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்கள் என்ற அடையாள வில்லையை மாட்டிவிடுகிற இவர்கள்தான் உண்மையில் இந்துக்களின் விரோதிகள்!

பெரும்பான்மைத் தீர்ப்போடு உடன்படாத இரண்டாவது நீதிபதி இந்த வழக்கை எதற்காக மற்ற மதங்களின் பிரச்சினைகளோடு இணைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிப்பது, பார்ஸிகளின் தீக்கோயிலில் பெண்களை அனுமதிப்பது, ஒரு பிரிவினரின் சடங்குப்படி பெண் குழந்தைகளின் பிறப்புறப்பைச் சிதைப்பதற்குத் தடை விதிப்பது… இப்படியான கோரிக்கைகள் உள்ளன. அந்த வழக்குகளும் நடந்துகொணடுதான் இருக்கின்றன. அந்த வழக்குகள் எல்லாவற்றையும் ஒரே விரிந்த அமர்வு எடுத்துக்கொள்கிறபோது இறுதித் தீர்ப்புக்கு மிகவும் கால தாமதமாகாதா? அந்தத் தாமதம் மக்கள் நல்லிணக்கத்தை வளர்க்க உதவுமா அல்லது அதற்கு எதிரான பகைமையை விசிறிவிட உதவுமா? காலம் என்ன பதில் சொல்கிறதென்று பார்ப்போம்.

– அ.குமரேசன்,

தொடர்புக்கு: theekathirasak@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *