- செய்திகள், விளையாட்டு

பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவரும் கிரிக்கெட் கபில் தேவ் பெருமிதம்

புதுடெல்லி, பிப்.23:-

இளைஞர்களிடையே கிரிக்கெட் ஆட்டம் தற்போது பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் சார்பில்  7-வது விளையாட்டு மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்று கபில்தேவ் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர். தற்போது 40 நாள் கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் 10 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றார். இது ஒரு அற்புதமான விஷயம். எனவே கிரிக்கெட் என்பது இப்போது இளைஞர்களுக்கு ஒரு பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.

காலம் மாறும்போது எண்ண ஓட்டங்களும் மாறுகிறது என்றும் கபில்தேவ் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய அவர், தற்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் படிக்க விருப்பம் இல்லாவிட்டால், கிரிக்கெட்டில் நாட்டம் செலுத்தி டெண்டுல்கர் அல்லது ராகுல் திராவிட்டைப் போல சிறந்து வீரராக வலம் வருமாறு கூறுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

விளையாட்டை ஊக்குவிக்கும் வண்ணம் அரசாங்கம் போதுமான விளையாட்டு மையங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை  வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு விளையாட்டு சாதனங்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
துப்பாக்கி சுடும் விளையாட்டுக்குத் தேவையான சாதனங்களை இறக்குமதி செய்வதில் பிரச்சினைகள் உள்ளதாக தனக்கு தெரியவந்துள்ளதாகவும் அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு விளையாட்டு சாதனங்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு பள்ளியிலும் கண்டிப்பாக விளையாட மைதானம் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளிகளில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்கள் வெளிவருகிறார்கள் என்றும் அப்படியிருக்கையில் பள்ளிகளில் போதுமான விளையாட்டு மைதானங்கள்  இல்லை என்றால் எப்படி இந்தியாவில் உலக சாம்பியன்கள் உருவாவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கபில் தேவ் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறைச் செயலாளர் ராஜிவ் யாதவும் கலந்து கொண்டார். இந்த நிலையில் கபில் தேவின் கோரிக்கைக்கு பதில் அளித்த அவர், நிதி நிலை அறிக்கையில் விளையாட்டுக்கு ஒதுக்கப்படும் தொகையில் எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பது இயலாத காரியம் என்று குறிப்பிட்டார். மேலும் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றார்.

Leave a Reply