- செய்திகள், வணிகம்

பட்ெஜட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள்

புதுடெல்லி, ஜன.1:-

அடுத்த 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பதற்கு முந்தைய ஆலோசனை கூட்டங்களை வரும் 4-ந் தேதி (திங்கட்கிழமை) மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தொடங்குகிறார்.

வர்த்தக அமைப்புகள்

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள், தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து மத்திய நிதி அமைச்சர் ஆலோசனை செய்வார்.

அடுத்த மாதம் இறுதியில் தனது 2-வது முழு  நிதி ஆண்டு மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். அதற்காக, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள் இம்மாதம் 4-ந் தேதி தொடங்குகிறது.

அன்றைய தினம் வேளாண் துறையினர், தொழிற் சங்க அமைப்புகளுடன் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்துகிறார். ஜனவரி 6-ந் தேதி பொருளாதார நிபுணர்கள், தொழில்துறையினரின் கருத்துகளை கேட்கிறார். அடுத்த நாளில் ஐ.டி. துறையினருடன் பேசுகிறார்.

சந்திப்பு

நிதித்துறை கட்டுப்பாட்டு அமைப்புகள், அருண் ஜெட்லி சந்திப்பு ஜனவரி 11-ந் தேதி நடைபெறும். அடுத்த நாளில் சமூக, வங்கி, நிதி நிறுவனங்களிடம் பட்ஜெட் குறித்து ஆலோசனை செய்கிறார்.

மத்திய அரசு ஏற்கனவே பட்ஜெட் தயாரிப்பு பணிகளை தொடங்கி விட்டது. பல்வேறு துறை அமைச்சர்கள், துறைகள், செலவின துறையுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமே திட்ட, திட்டம் சாரா செலவினங்களை மதிப்பீடு செய்வதே.

மத்திய நிதி அமைச்சரின் பட்ஜெட் தயாரிப்பு அணியில் மத்திய நிதி துறை இணைஅமைச்சர் ஜெயந்த் சின்ஹா, தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி ஆயோக் துணை தலைவர் அரவிந்த் பனாகாரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நிதித்துறை செயலாளர் ரத்தன் வாட்டல் தலைமையிலான அதிகாரிகள் பிரிவில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்தி கந்த தாஸ், வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆகியா, பங்கு விற்பனை துறை செயலாளர் நீராஜ் குப்தா ஆகியோர் பங்கு பெற்றுள்ளனர்.

பொதுமக்களுக்கு அழைப்பு

எதிர்வரும் 2016-17-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கும்மாறு பொதுமக்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது. http://mygov.nic.in என்ற வலைதளத்தில் பட்ஜெட் குறித்த ஆலோசனை, கருத்துகளை பொதுமக்கள் பதிவு செய்யலாம்.

Leave a Reply