- செய்திகள், விளையாட்டு

பஞ்சாப்-ஹைதராபாத் இன்று மோதல்

 

ஹைதராபாத், ஏப்.23:-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இன்று எதிர் கொள்கிறது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரவு 8 மணி ஹைதராபாதில் உள்ள ராஜீவ் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.

முன்னதாக முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி கண்ட ஹைதராபாத் அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கான எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத், குஜராத் அணியை விக்கெட்டை இழக்காமலே வீழ்த்தியுள்ளது.

காயம் காரணமாக யுவராஜ் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, கனே வில்லியம்ஸ் ஆகியோர் இல்லாத நிலையிலும் அந்த அணி தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் ஆட்டமிழக்காமல் 90 ரன்களைக் குவித்தார். ஆக அணிக் கேப்டனின் ஆட்டம் அந்த அணிக்கு வலு சேர்க்கக் கூடியதாக உள்ளது. மேலும் கடந்த மூன்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ஷிகர் தவான் கடந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 53 ரன்களை எடுத்துள்ளது அந்த அணியை மூச்சுவிட வைத்துள்ளது.

நெருக்கடியான நேரத்தில் மோர்கன், ஹென்ஹிகியூஸ், நமன் ஓஜா ஆகியோர் கை கொடுத்துள்ளனர். நெஹ்ரா இல்லாவிட்டாலும் வேகப் பந்து வீச்சாளர் புவனேஸ்குமாரின் பந்து வீச்சு வலுப் பெற்றுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். பஞ்சாப் அணியைப் பொருத்தவரை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில்தான் உள்ளது. அந்த அணியில் வோராவின் ஆட்டம்தான் சிறப்பாக அமைந்துள்ளது. மற்ற வீரர்கள் யாரும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அத்தோடு மோஹித் சர்மா, படேல், சந்தீப் சர்மா ஆகிய பந்து வீச்சாளர்களும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Leave a Reply