- செய்திகள், விளையாட்டு

பஞ்சாப் அணியின் நாக்பூர் ஆட்டங்கள் தர்மசாலாவுக்கு மாற்றம்

 

புதுடெல்லி, ஏப்.22:-
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி நாக்பூரில் ஆட உள்ள மூன்று போட்டிகளும் தர்மசலாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பஞ்சாப் அணியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக ஐபிஎல் போட்டிகளை வரும் 30-ம் தேதிக்கு பிறகு அந்த மாநிலத்தில் நடத்த மும்பை உயர் நிதிமன்றம் தடை விதித்துள்ளது. மே 1-ம் தேதி நடக்க உள்ள புனே-மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை மட்டும் புனேயில் நடத்த அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் நாக்பூரில் மே 7, 9, 15-ம் தேதிகளில் முறையே டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே  நடைபெற இருந்த போட்டிகளை இமாசலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடத்த பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பஞ்சாப் அணி, தங்களது மூன்று போட்டிகளையும் தர்மசாலாவில் நடத்த அனுமதி அளித்துள்ள இமாசலப்பிரேதச கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது போட்டிகளை நடத்த ஜெயப்பூரையும் புனே அணி தனது போட்டிகளை நடத்த விசாகப்பட்டினத்தையும் தேர்ந்தெடுத்துள்ளது. மும்பையில் நடக்க இருந்த இறுதிப் போட்டி பெங்களூருவில் நடக்கிறது.

Leave a Reply