- உலகச்செய்திகள், செய்திகள்

பங்குச் சந்தைகளில் உற்சாகம் தொடர்கிறது காளையின் பதிலடி சென்செக்ஸ் 568 புள்ளிகள் அதிகரிப்பு

புதுடெல்லி, பிப்.16:-
தொடர்ந்து 2-வது வர்த்தக தினமாக பங்குச் சந்தைகளில் நேற்று வர்த்தகம் களை கட்டியது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 182 புள்ளிகள் அதிகரித்தது.
பங்குச் சந்தையை ஏற்றம் காண வைத்தவை

பங்குகளின் விலை
ரூபாய் மதிப்பு
ஆசிய நிலவரம்
பிரதமர் நரேந்திர மோடி
ஐரோப்பிய பங்குச் சந்தைகள்

பங்குகளின் விலை

கடந்த வாரத்தில் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் பெரும்பான்மையான பங்குகளின் விலை குறைந்தது. குறிப்பாக புளூசிப் நிறுவன பங்குகளின் விலை மிகவும் சரிந்தது. இதனை முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பாக கருதி அந்த பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர். இது பங்கு வர்த்தகத்தின் முன்னேற்றத்துக்கு அடிகோலியது.

ஆசிய நிலவரம்

நீண்ட புத்தாண்டு (லூனார்) விடுமுறைக்கு நேற்று சீன பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நடைபெற்றது. சீன யுவான் மதிப்பு சரிவு குறித்த கவலைகள் ஒரு புறம் இருந்தாலும் ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இது நம் நாட்டு பங்கு வர்த்தகத்துக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் இந்தியா அதி வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது என்று  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இது பங்கு வர்த்தகத்தின் எழுச்சிக்கு கை கொடுத்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகள்

ஐரோப்பிய பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் தொடங்கின. ஆசிய பங்குச் சந்தைகளில் சிறப்பாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம். ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்ததால் அதன் தாக்கம் நம் நாட்டு பங்குச் சந்தைகளிலும் வெளிப்பட்டது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 16 காசுகள் அதிகரித்து 68.07-ஆக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ரூபாய் மதிப்பு 68.23-ஆக இருந்தது. பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு இதுவும் ஒரு காரணம்.

மும்பை பங்குச் சந்தையில் தொலைத்தொடர்பு துறை குறியீட்டு எண் மட்டும் இறங்கியது. ரியல் எஸ்டேட், மின்சாரம், பொறியியல் சாதனம், வங்கி, வாகனம், நுகர்பொருள், எரிசக்தி, உலோகம் உள்பட இதர துறைகளின் குறியீட்டு எண்கள் ஏற்றம் கண்டன.

டாட்டா ஸ்டீல்
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், டாட்டா ஸ்டீல், எல் அண்டு டி, ஸ்டேட் வங்கி, அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, டாட்டா மோட்டார்ஸ், மாருதி, ரிலையன்ஸ், ஓ.என்.ஜி.சி. உள்பட 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. எச்.டி.எப்.சி. நிறுவனம், இந்துஸ்தான் யூனிலீவர், பார்தி ஏர்டெல் ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை  சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்ந்து 23,554.12 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிக அளவாக 23,622.64 புள்ளிகளுக்கும், குறைந்த அளவாக 23,197.67 புள்ளிகளுக்கும் சென்றது.
தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 182 புள்ளிகள் ஏற்றம் கண்டு 7,162.95 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 7,182.80 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 7,056.80 புள்ளிகளுக்கும் சென்றது.

Leave a Reply