- செய்திகள், மாநிலச்செய்திகள்

நேதாஜி தொடர்பான இரு முக்கிய ரகசிய ஆவணங்கள்

 

புதுடெல்லி, ஏப்.27-

நேதாஜி தொடர்பான இரண்டு முக்கியமான ரகசிய ஆவணங்களை, இந்த ஆண்டு இறுதியில் ஜப்பான் வெளியிட இருப்பதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு தெரிவித்தார்.

சுபாஷ் சந்திரபோஸ்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு இணையாக போற்றப்படுகிறவர், ‘நேதாஜி’ என்று மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் ‘வங்காளச்சிங்களம்’ சுபாஷ் சந்திர போஸ்.

மகாத்மா காந்தி அகிம்சை வழியில் போராடியபோது, ‘இந்திய தேசிய ராணுவம்’ என்ற பெயரில் படை திரட்டி, வெளிநாடுகளில் இருந்து வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயுதம் தாங்கி போராடிய ‘மாவீரன்’ அவர்.

மரணத்தில் மர்மம்

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி  மரணம் அடைந்ததாக கூறப்பட்டாலும், அவருடைய மரணத்தில் நீடித்து வந்த மர்ம முடிச்சுகள் இதுவரை முழுமையாக அவிழ்க்கப்படவில்லை.

1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில் அவர் இறந்ததாக, இரண்டு விசாரணை கமிஷன்கள் முடிவு செய்திருந்தன. நீதிபதி எம்.கே.முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட 3-வது விசாரணை கமிஷன், அது போன்ற ஒரு விமான விபத்தே நடைபெறவில்லை என்று கூறி இருந்தார்.

வெளிநாட்டு ஆவணங்கள்

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நேதாஜியின் உறவினர்களை சந்தித்த பிரதமர் மோடி, நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் என்று உறுதி அளித்து, அதன்படி சில ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு, வெளிநாடுகளில் உள்ள நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது-

ஜப்பான் வெளியிடுகிறது

‘‘ஜப்பான் நாட்டில் நேதாஜி தொடர்பான மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முக்கியமான 5 ரகசிய ஆவணங்கள் உள்ளன. அவற்றில் இரு ஆவணங்களை இந்த ஆண்டு இறுதியில் ஜப்பான் அரசு வெளியிடுகிறது.

ஆனால், மற்ற 3 ஆவணங்கள் குறித்து ஜப்பான் எந்த உறுதி மொழியையும் இதுவரை இந்தியாவுக்கு அளிக்கவில்லை. இருப்பினும், அந்த ஆவணங்களையும் நிச்சயம் ஜப்பான் வெளியிடும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இங்கிலாந்து கோப்புகள்

இதேபோல் மற்ற ெவளிநாடுகளுடனும் இது குறித்து தொடர்பு வைத்திருக்கிறோம். ஆஸ்திரேலியா, ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், தங்களிடம்  கோப்புகளோ அல்லது ஆவணங்களோ எதுவும் இல்லை என்று தெரிவித்துவிட்டன.

இங்கிலாந்தைப் பொருத்தவரை, அதனிடம் இருந்த 62 கோப்புகளும் அந்த நாட்டின் நூலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதாக, தெரிவித்து இருக்கிறது. ஜெர்மனி அரசும், தங்களிடம் இருந்த கோப்புகள் வெளியிடப்பட்டு, காப்பகத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இதுவரை நேதாஜி தொடர்பாக வெளியிடப்பட்ட 150 கோப்புகளை இணைய தளத்தில் பார்க்கலாம். அத்துடன் ஒவ்வொரு மாதங்களும் 25 கோப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன’’.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் அலுவலகத்தில் மாயமான
‘நேதாஜிக்கு சிலை அமைக்கும் கோப்பு’

மத்திய அமைச்சர் ரிஜ்ஜிஜு பேசுகையில், டெல்லியில் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்த நேதாஜி தொடர்பான இரு கோப்புகள் மாயமாகிவிட்டதாகவும், அவற்றைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

‘‘நேதாஜியின் அஸ்தி என்று நம்பப்பட்ட அஸ்தியை ஜப்பானின் ரெங்கோஜி கோவிலில் இருந்து இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வருவது மற்றும் டெல்லி செங்கோட்டையில் நேதாஜிக்கு சிலை அமைப்பது தொடர்பான கோப்பு பிரதமர் அலுவலகத்தில் இருந்தது.

இதேபோல் உள்துறை அமைச்சகத்தில் இருந்ததும் நேதாஜியின் அஸ்தி தொடர்பான கோப்புதான்’’ என்றும், அந்தக் கோப்புகளை தேடி வருவதாகவும் அமைச்சர் ரிஜ்ஜிஜு மக்களவையில் குறிப்பிட்டார்.

—..

Leave a Reply