- உலகச்செய்திகள், செய்திகள்

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை வெற்றிகரமானது என அதிபர் கிம் அறிவிப்பு

சியோல், ஏப். 25:-

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி வடகொரியா அரசு  வெற்றிகரமாக  நேற்று பரிசோதனை செய்தது.

இந்த ஏவுகனை தென் கொரியாவையும், அமெரிக்காவையும் அழிக்கும் வல்லமை கொண்டது. முதல் சோதனையே வெற்றியாக அமைந்தது என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கையை மீறி..

வடகொரியா 4 முறை அணுகுண்டு சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி ஐ.நா.வின் பொருளாதார தடைக்கு ஆளானது. கொரியப் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதம், ஏவுகணை சோதனை நடத்தினால், பொருளாதார தடைகள் மேலும் அதிகரிக்கும் என்று ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை செய்தும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

‘‘ஐ.நா.வின் தீர்மானத்தை மீறிய செயலை வடகொரியா செய்துள்ளது, தொடர்ந்து வடகொரியா செய்யும் ஒவ்வொரு அத்துமீறலும் கொரிய பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும்’’ என்று இங்கிலாந்து, அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வல்லமை

இது குறித்து வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. வெளியிட்ட செய்தியில், “ நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நடத்தப்பட்ட இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை அதிபர் கிம் நேரடியாக பார்வையிட்டார்.

தென் கொரிய பொம்மை படையையும், அமெரிக்க ஏகாதிபத்திய படைகளையும் அழிக்கும் வல்லமை கிடைத்துவிட்டது. நம் நாட்டின் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்'' என்று அதிபர் தெரிவித்தார் என வெளியிட்டுள்ளன.

Leave a Reply