- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை துணைவேந்தர் நியமனத்தை நிறுத்தி வைக்கவேண்டும்

சென்னை, பிப்.7-

கல்வி தகுதி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை துணைவேந்தர் நியமனத்தை நிறுத்தி வைக்கவேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு, துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல் செய்வதற்கு வசதியாகவே பல்கலைக்கழக மானியக்குழு விதிகளை பின்பற்ற மறுக்கிறது என்பது தான் உண்மை. இதை எதிர்த்து கல்வியாளர் மு. அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகம், சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு துணைவேந்தர்களை நியமிக்க அரசு திட்டமிட்டிருக்கிறது.
அதன்படியே, 3 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான பரிந்துரைப்பட்டியலை ஆளுனரிடம் தேர்வுக்குழுக்கள் தாக்கல் செய்திருக்கின்றன.  அப்பட்டியலில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 பேர் துணைவேந்தர்களாக தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கான பணி நியமன ஆணை எந்த நேரமும் அவர்களுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
நிறுத்தி வைக்க வேண்டும்
பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கல்வித் தகுதி குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை துணைவேந்தர்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர் பணி நிறைவு அடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய துணைவேந்தர் தேர்வுக்கான பணிகளைத் தொடங்கி  வெளிப்படையான முறையில் நியமனம்  செய்ய வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply