- செய்திகள், மாவட்டச்செய்திகள்

நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படவில்லை கருணாநிதி குற்றச்சாட்டு…

சென்னை, ஏப்.17-
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அண்ணா நூற்ணாண்டு நூலகம் பாரமரிக்கப்படவில்லை என்று தமிழக அரசு மீது கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கட்டமைப்பு வசதிகள்
தி.மு.க. ஆட்சியில், ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு, என்னால் திறந்து வைக்கப்பட்டது என்பதற்காக  அ.தி.மு.க. ஆட்சியில் முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை. மேலும் அதனை குழந்தைகள் மருத்துவமனையாகவும், கல்யாண மண்டபமாகவும் மாற்றிட மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நீதிமன்றக் கண்டனங்களாலும், தமிழறிஞர்கள் மற்றும் மாணவர்களின் கடும்  எதிர்ப்பாலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை வாங்காமலும், உள்கட்டமைப்பு வசதிகளைப் பராமரிக்காமலும் தொடர்ந்து அ.தி.மு.க. அரசு புறக்கணித்து வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோன்மணி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு விசாரித்தது.
29.10.2015 அன்று தலைமை நீதிபதி  தலைமையிலான அமர்வு உத்தரவிட்டதை அடுத்து,  நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தப் பட்டு, நூலகம் பராமரிக்கப்படுகிறதா என நீதிமன்ற ஆணையாளர்கள் ஆய்வு செய்து 8.1.2016 அன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  அறிக்கையில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எதுவும் மேம்படுத்தப்படவில்லை என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது.
உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும்…
அண்ணா நூலகம் தொடர்பான வழக்கு 15.4.2016 அன்று தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "உயர்நீதி மன்றம் பலமுறை உத்தர விட்டும், அண்ணா நூலகத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்யப்பட வில்லை" என்று எடுத்துரைத்தார்.
அண்ணா நூலகத்தைப் பொறுத்தவரை, சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதா அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது இது முதல் முறையல்ல. பல முறை கண்டனம், கடும் கண்டனம், எச்சரிக்கை எனத் தெரிவித்திருந்த போதிலும், அவற்றைப் பற்றி அ.தி.மு.க. அரசு சிறிதும் கவலை கொள்ளவோ, உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து உரிய நடவடிக்கை எடுக்கவோ இல்லை.
சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வி.  2011-ல் அ.தி.மு.க. வினர் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக சமச்சீர் கல்வியில் கை வைத்தனர். 19-7-2011 அன்று சென்னை உயர் நீதிமன்றம், "சமச்சீர் கல்வியின் தரம், நிறைவேற்றும் முறை பற்றி ஆய்வு செய்திடத்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதைச் செய்யாமல், திட்டத்தை இந்த ஆண்டு நிறைவேற்றலாமா, அடுத்த ஆண்டு நிறைவேற்றலாமா என்று ஆராய்ச்சி நடத்த உத்தரவிடவில்லை.  அதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறைவேற்ற முடியாது என்று தமிழக அரசு அறிக்கை கொடுக்கிறது.  சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதை எதிர்த்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சட்டத் திருத்தம் என்ற பெயரில் சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.  இது கல்வி பெறும் உரிமையைப் பாதுகாக்கும் அரசியல் சாசனச் சட்டத்திற்கு எதிரானது" என்று உயர் நீதிமன்றம் ஜெயலலிதா அரசை கடுமையாகக் கண்டித்தது.
தமிழக அரசுத் துறைகளில் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  அதற்குப்பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும்,  அவர்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Leave a Reply