நாலடியாரும் நற் பழமொழியும்..!

‘நாலடியார்’, சமண முனிவரால் பாடப்பெற்றது.  வடபுலத்தில் பஞ்சம் வந்தபோது சமண முனிவர், தென்புலத்து மாநகராம் மதுரைக்கு வந்து தங்கினார்.  வடக்கில் பஞ்சம் நீங்கிய காலை, மீளவும் அங்குச் செல்ல விரும்பிப் பாண்டிய மன்னனிடம் முறையிட்டனர்.  அவனோ, மதுரையிலேயே தங்குமாறு கூறினான்.  எனினும் அவர், மன்னனிடம் சொல்லிக்கொள்ளாமல், அவனது சிறப்பைப் பற்றியும், தம்முடைய அறக்கருத்துகளைப் பற்றியும் ஒவ்வொரு வெண்பாப்பாடலைப் புனைந்து வைத்துவிட்டு, இரவோடு இரவாக மதுரையினின்றும் வடநாடு சென்றனர்.

மறுநாள், சமண முனிவர் எவரையும் காணவில்லையென்பதால், மன்னன் அவர் மீது சினங்கொண்டு, அவர் எழுதி வைத்து விட்டுச் சென்ற அனைத்து ஏடுகளையும், பொய்யாக் குலக்கொடியாகிய ‘வையை’ ஆற்றில் எறியச் சொன்னான்.  அவ்வாறு எறியப்பெற்ற ஏடுகளில் பலவும் நீரோட்டத்தை எதிர்கொண்டு வந்தன.  மன்னன், வியந்து போனான்.  எதிர்கொண்டு வந்தவற்றுள் நானூறு பாக்களைத் தொகுத்து, ‘நாலடியார்’ என்னும் நூலைக் கொணர்ந்தான் என்பது பழங்கதை.  இந்நூல், ‘நாலடி நானூறு’ எனவும் வழங்கப்படும்.  ‘ஆர்’ என்னும் சிறப்பு விகுதியையும் பெற்றது.  தொகுத்து உரையெழுதியவர் ‘பதுமனார்’, அரும்பதவுரை எழுதியவர் ‘மதிவரர்’.

நாலடியாரில் உள்ள நற்சுவைப் பாடல்களில் ஒரு சிலவற்றை சான்றாகக் காண்போம்…

இன்றுகொ லன்றுகொ லென்றுகொ  லென்னாது

பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி

யொருவுமின் தீயவை யொல்லும் வகையால்

மருவுமின் மாண்டா ரறம்                                              – 36

இறுதி இன்றைக்கு வருமோ அன்றைக்கு வருமோ என்றைக்கு வருமோ எண்ணாமல் கூற்றுவன் பின்னாலேயே நின்றுள்ளான் என்றெண்ணித் தீயவற்றை விட்டு விடுங்கள்.  இயன்ற வகையில் மாண்புடையார் அறத்தைத் தழுவுங்கள்.

 

ஆவே றுருவின வாயினு மாபயந்த

பால்வே றுருவின வல்லவாம் !

லொருதன்மைத் தாகு மறநெறி யாபோ

லுருவு பலகொள ளீங்கு                                  – 118

பசுக்கள் பல நிறங்களைக் கொண்டனவாயினும், அவை கொடுத்த பால், பல நிறங்களைக் கொல்லவல்ல;  பசுக்களைப் போல் அறமுறைகள் பற்பலவாயினும், அவற்றின் பயன், பால்போல் ஒரு தன்மையை உடையனவாகும்.

 

பாலோ டளாயநீர் பாலாகு மல்லது

நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம் ! – தேரின்,

சிறியார் சிறமையுந் தோன்றாதாம் நல்ல

பெரியார் பெருமையைச் சார்ந்து – 177

பாலுடன் கலந்த நீரானது, பாலாகத் தெரியுமே தவிர நீராக நிறம் விளங்கித் தோன்றாதாம்.  ஆராய்ந்து பார்க்கையில் நற்குணச் சான்றோர் பெருமையில் ஒன்று கலந்துவிட்டால், கீழோரின் சிறுமையும் தோன்றாதாம்.

 

கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது

வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; – தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை

நயப்பாகும் நட்பாரும் இல்.           – 215

மரக்கிளைப் பூக்கள், உதிரும்வரை கூம்பாதன போலத் தொடக்கம் போலவே முடிவுரை விரும்புவதே நட்பு; தோண்டிய குளத்துநீர்ப் பூக்கள் போல, முதலில் மலர்ந்து முடிவில் சுருங்குவாரை விரும்புவாரும் நட்பு செய்வாரும் இலர்.

 

நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்

நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.       – 221

நல்லாரெனத் தாம் மிகவிரும்பி ஏற்றுக்கொண்டவரை, நல்லவரல்லார் என்றபோதிலும் நண்பராகவே கொள்ள வேண்டும்.  நெல்லுக்கு உமியாகிய குறையுண்டு; நீருக்கு நுரையாகிய குறையுண்டு ; பூவிற்கும் புல்லிதழாகிய குறையுண்டு.

 

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை

நிலை கலக்கிக் கீழிடுவானும் நிலையினும்

மேன்மேல் உயர்ந்து நிறுப்பானுந் தன்னைத்

தலையாகச் செய்வானுந் தான்                 – 248

நல்ல நிலையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்பவனும், தன்னுடைய நிலையக் கெடுத்துக் கொண்டு தாழ்த்திக் கொள்பவனும், இருக்கும் நிலையினின்றும் தன்னை உயர்த்திக் கொள்பவனும் தன்னைத் தலைமையாளனாகச் செய்து கொள்பவனும் தானே.

 

நீரினு நுண்ணிது நெய்யென்பர் நெய்யினும்

யாரு மறிவர் புகைநுட்பந் – தேரி

னிரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்

புகற்கரிய பூழை நுழைந்து            – 282

நீரைவிட நுட்பமானது நெய்யெனச் சொல்வர்; ஆராய்கையில், இரத்தலெனும் துன்னமுடையவன், அந்தப் புகையும் நுழைவதற்கரிய சிறு துவாரத்திலும் நுழைந்து செல்வான்.

 

 

புதுப்புனலும் பூங்குழையார் நட்பு மிரண்டும்

விதுப்புற நாடின்வே றல்ல! – புதுப்புனலும்

மாரி யறவே யறுமே யவரன்பும்

வாரி யறவே யறும்                              – 370

புதிய வெள்ளமும், அழகிய தோடணிந்த விலைமகளிரின் நட்புமாகிய இவ்விரண்டையும் விரிவாக ஆராயின், வேறல்ல;  புதிய வெள்ளமும் மழை நீங்கினால் நீங்கிவிடும்; விலை மகளிர் அன்பும் பொருள் வரவு நீங்கினால் நீங்கிவிடும்.

 

பழமொழி

முதுசொல், முதுமொழி, தொன்றுபடு பழமொழி என்பன, பழமொழியைக் குறிப்பன.  தொல்காப்பியர், பழமொழியை, ‘முதுசொல்’ என்றும், ‘முதுமொழி’ என்றும் குறிப்பிடுவதைக் காணலாம்.

பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,

அங்கதம், ‘முதுசொல்லோடு’ அவ்வேழ் நிலத்தும்,

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

நாற்பேர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர் (தொல்-1336)

 

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்

மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றி

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப   (தொல். 1433)

 

அகநானூற்றில், பழமொழியைத் ‘தொன்றுபடு பழமொழி’ என்று குறிப்பிடுகிறார் மாமூலனார்.

‘அம்ம வாழி, தோழி! இம்மை

நன்றுசெய் மருங்கில் தீதில் என்னம்

‘தொன்றுபடு பழமொழி’ இன்று பொய் தன்றுகொல் ?

(அகம் 101. 1-3)

பதினெண் கீழ்க்கணக்கில், மூன்றாவதாகப் ‘பழமொழி’ உள்ளது.  பழமொழியின் ஆசிரியர் ‘முன்றுறையரையனார்’.  முன்றுரை – இடப்பெயர்; அரையன் – அரசன்;  ஆர் – சிறப்பு விகுதி.  இது, ‘பழமொழி நானூறு’ எனவும்படும்.  ‘பதிப்புச் செம்மல்’ முனைவர் ச.மெய்யப்பனார், “பத்துவரிகளில் சொல்ல வேண்டியதைப் பழமொழிகள், ஒருவரியில் சொல்லிவிடும்.  பழமொழிகள், பட்டறிவின் விளைச்சல், அவைதரும் பயன் மிகுதி.  பழமொழிகள் ஒரு நாட்டின், இனத்தின், மொழியின், சமூகத்தின் அடையாளங்கள்” என்பார்.

ஈர்த்த சிலவற்றை இங்கே சான்றாகக் காண்போம்…

 

புலமிக் கவரைப் புலமை தெரிதல்

புலமிக் கவர்க்கே புலனாம் – நலமிக்க

பூம்புனல் ஊர! பொதுமக்கட் காகாதே

‘பாம்பறியும் பாம்பின கால்’.                                                        – 5

நலம் மிகுந்த நீர் வளங்கொண்ட ஊரை உடையவனே!  அறிவு மிகுந்தவரின் அறிவைத் தெரிந்து கொள்ளுதல், அறிவு மிகுந்தவராலேயே ஆகக்கூடியது.  எளிய அறிவுடைய பொது மக்களுக்கு அத்தன்மை இயலாத ஒன்றே.  அஃது, எது போன்றதெனில், பாம்பின் கால்களைப் பாம்பறியும் தன்மை போன்றது.

 

ஆயிரவ ரானு மறவிலார் தொக்கக்கால்,

மாயிரு ஞாலத்து மாண்பொருவன் போல்கலார் ;

பாயிரு ணீக்கும் மதியம்போல் பல்மீனும்

காய்கலா வாகும் நிலா                                                     – 47

உலகத்தில் பரவியுள்ள இருளைப் போக்குகின்ற வெண்மதியம்போலப் பலவாக விண்மீன்கள் ஒன்று சேர்ந்தாலும், அவை முழுமதியம்போல் ஒளி வீசமாட்டா.  அறிவில்லாதவர் ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்தாலும், மிகப் பெரிய நிலவுலகத்தில், சான்றாண்மைப் பண்புகளால் பெருமையுடைய ஒருவனைப்போல் ஆகமாட்டார்.

 

செந்நீரார் போன்று சிதைய மிதிப்பார்க்கும்

பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்

அ நீர் அவரவர்க்குத் தக்கு ஆங்கு ஒழுகுபவே

வெந்நீரில் தண்ணீர் தெளித்து                                    – 90

 

நல்லியல்பினரைப் போல விளங்கித் தம் செயலழிய நினைப்பவர்க்கும், பொய்யியல்பினரைப் போல விளங்கித் தாம் நினைத்த செயலை முடிப்பவர்க்கும் வெந்நீரில் தண்ணீரைக் கலந்து, அந்நீர் அவரவர்க்கும் தக்கபடி பயன்படுதல்போல், அவரவர் இயல்புகளுக்கேற்பச் செயல் முடிக்க விளங்குவர் கற்றறிந்த சான்றோர்.

 

 

மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மட மகள் பாண்மகற்கு நீர் உலையுள்

பொன் திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்று உறா முன்றிலோ இல்                                    – 171

மழை ஒரு சிறிதும் பெய்யாமல் வற்றியுலர்ந்த காலத்தும், பாரியின் இளமகள் தன்னிடம் பாடிப் பரிசில் பெற வந்த பாணனுக்கு, நீர் பெய்த உலையுள் பொன்னரிசி போட்டு, அதனை உணவாகத் தந்தாள்.  எனவே, எந்த ஒரு பொருளுமில்லாத இல்லம் என்பதோ இல்லை.  இரவலர்க்கு எதையும் எப்போதும் தரலாம்.

 

கன்றி முதிர்ந்த கழியப் பல் நாள் செயினும்

என்றும் சிறியார்கண் என்னானும் தோன்றாதாம்

ஒன்றாய்விடினும் உயர்ந்தார் படும் குற்றம்

குன்றின் மேல் இட்ட விளக்கு                                  – 204

மிகவும் சினந்து அளவற்ற கொடுஞ்செயல்களைப் பல நாள்களாகச் செய்தபோதிலும், அவற்றுள் ஒன்றுகூட எப்பொழுதும் கீழ் மக்களிடம் பிறர் எண்ணுமாறு தோன்றுவதில்லை.  ஆனால், மேன்மக்களிடம் உண்டாகின்ற குற்றச் செயல் ஒன்றாக இருந்தபோதிலும், அது குன்றின் உச்சியில் ஏற்றி வைத்த விளக்கைப்போல விளங்கும்.

 

கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர் தெற்ற

அறை கல் அருவி அணி மலை நாட

நிறை குடம் நீர் தளும்பல் இல்  – 243

மலைகளினின்றும் வீழும் அருவிகளைக் கொண்ட அழகிய குறிஞ்சி நிலத் தலைவனே!  கற்க வேண்டிய நூல்களைக் கசடறக்கற்க அறிஞர் பெருமக்கள் கண்ட அடக்கத்தை அறியாதார், மறந்தே தம்மை உயர்வாகப் பேசிக்கொள்வார்.  சிறிதும் இடமின்றி நிரம்பிய நீருள்ள குடமானது, தன்னிடமுள்ள நீரைத் தளும்பாமல் வைத்துக்கொள்ளும்.

 

நூக்கி அவர் வெலினும் தாம் வெலினும் வெம் சமத்து

தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர் அஃது அன்றி

காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல்

யாப்பினுள் அட்டிய நீர்                                                      – 296

வீரங்கொண்டு முழு வலிமையோடு கொடும்போர்க் களத்தில், மாறு கொண்டவர் வென்றாலும் தாம் வென்றாலும், அடர்த்துத் தாக்கி வெற்றியொன்றையே எதிர்நோக்குவர் தகுதியுடைவர்.  அவ்வாறல்லாமல் பாதுகாப்பரணுக்குள் இருந்து கொண்டே சினங்கொண்டவராய் வாய் வீரம் பேசுதலென்பது, வயலில் உள்ள நீரை வடித்தல் போன்றது.

 

 

முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை அளித்தாரைக் கேட்டு அறிதும் சொல்லின்

நெறி மடல் பூம் தாழை நீடு நீர் சேர்ப்ப

அறி மடமும் சான்றோர்க்கு அணி                        – 361

 

அடத்தியான மடல்களையுடைய அழகிய தழைகள் நிரம்பிய நெடுங்கடல் துறைவனே !  கானகத்தில் காற்றில் மோதுண்ட முல்லைக் கொடிக்குத் தேரையும் (வள்ளல் பாரி), குளிரால் நடுங்கிய வண்ண மயிலுக்குப் போர்வையையும் (வள்ளல் பேகன்) தந்தவரை யாம் கேட்டறிந்துள்ளோம்.  சொல்லப்போனால், அறிந்தும் அறியாது போன்ற ‘அறிமடமும்’ சான்றோர்க்கு அழகாகும்.

 

 

 

 

 

 

– முனைவர் ஔவை ந.அருள்,

இயக்குநர்,

மொழி பெயர்ப்புத் துறை

, தமிழ்நாடு அரசு

 

 

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *