- சினிமா, செய்திகள்

நான் கமல்ஹாசனின் ரசிகை-

டெல்லியில் பி.எஸ்.ஏ. என்ற நாலு வருட பைன்ஆர்ட்ஸ் படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் சுரபிக்கு வந்தது சினிமா வாய்ப்பு. சரவணன் இயக்கிய `இவன் வேற மாதிரி' படத்தில் விக்ரம்பிரபு ஜோடியாக அறிமுகம் ஆனார். அந்த குடும்பப்பாங்கான தோற்றமும் குறுகுறு நடிப்பும் ரசிகர்களிடம் சுரபியை நெருக்கமாக்க,  `தமிழுக்கு இன்னொரு நாயகி கிடைச்சாச்சு' என்று கொண்டாடியது கோலிவுட். ஆனால் அந்தப் படம் வெளிவந்து வெற்றி பெற்ற நேரத்தில், விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் படிப்பைத் தொடரப் போய்விட்டார் சுரபி.
நடிப்பில் ரசிகர்களின் அமுதசுரபியாகி இருக்க வேண்டிய சுரபியை அதற்குப்பிறகு தேடிப்பிடித்து தனுஷின் `வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடிக்க அழைத்து வந்தார்கள். இரண்டு நாயகிகளில் ஒருவராக அந்தப் படத்தில் நடித்தார். அதுவும் வெற்றிப் படமாகி விட, அதேவேகத்தில் தனது இயக்கத்தில் `புகழ்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார் டைரக்டர் மணிமாறன். இந்தப் படத்தில் ஜெய் நாயகன். இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டிய சுரபி இப்போது நடித்துக் கொண்டிருப்பது தெலுங்குப் படங்களில். `வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடித்தபோதே சுரபியின் நடிப்பை பார்த்த பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது `அட்டாக்' படத்தில் சுரபியை நாயகியாக்கி விட்டார். இந்தப் படத்தில் நடிக்கும்போதே `எக்ஸ்பிரஸ் ராஜா' என்ற படத்திலும் சர்வானந்த் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி விட்டார்.

சுரபியிடம் `தொடர்ந்து மூன்று தமிழ்ப் படங்களில் நடித்த நிலையில் இங்கேயே தொடர் வாய்ப்பு வந்திருக்குமே. ஆனால் விரும்பியே தெலுங்குப்பட வாய்ப்பை பற்றிப் பிடித்துக் கொண்டு விட்டது போல் தோன்றுகிறதே?' என்ற கேள்வியை முன்வைத்தபோது…

“டெல்லியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் எல்லாம் நான் நடிக்க வருவேன். அதுவும் தமிழ், தெலுங்கு மொழிகளில் எல்லா ரசிகர்களுக்கும் அறிமுகமாவேன் என்றெல்லாம் கொஞ்சமும் யோசித்ததில்லை. `இவன் வேற மாதிரி' படத்தின் கதை தான் என்னை நடிப்பு பக்கம் கொண்டு வந்தது. அந்த கதையை டைரக்டர் சரவணன் அத்தனை அருமையாக சொன்னார். அந்த படம் ஹிட்டானதும் தொடர்ந்து  படவாய்ப்புகள் வரவே செய்தன.  படிப்பு பாதியில் நின்றதால் தான் மறுபடியும் டெல்லி போனேன். இந்த இடைவெளிக்குள் என்னை எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று பார்த்தால் மறக்காமல் தனுஷின் `வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடிக்க அழைத்தார்கள். இதற்காக தனுஷை சந்தித்தபோது,  குடும்பப் பாங்கான ஒரு கேரக்டர். அதில் நீங்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று சொன்னார். கதை மீதான ஈர்ப்பால் அந்தப் படத்திலும் நடித்தேன். தனுஷ் சொன்னதுபோலவே அந்த கேரக்டரும் ரசிகர்கள் மனதில் நின்றது. ரசிகர்கள் என்னை பார்க்கிற இடங்களில் எல்லாம்` தொடர்ந்து நடியுங்கள்' என்று சொல்லத் தொடங்கினார்கள்.

இந்த நேரத்தில் டைரக்டர் மணிமாறன் என்னை அவரது `புகழ்' படத்தில் நடிக்க அழைத்தார். அந்தப் படத்தில் என் கேரக்டரின் பெயர் புவனா. அந்த கேரக்டர் பற்றி டைரக்டர் விவரித்தபோது கிட்டத்தட்ட எனது இயல்பான கேரக்டரை ப் போலிருந்ததால் சந்தோஷமாய் நடிக்க ஒப்புக் கொண்டேன். நடுத்தர குடும்ப சூழலில் வாழும் இளைஞன் சமூக பிரச்சினையை எதிர்கொள்கிற அந்தப் படமும் படத்தின் பெயரைப் போலவே எனக்கு புகழ் தரும் என்பது என் நம்பிக்கை என் நம்பிக்கை. இதே நேரத்தில் தான் ராம்கோபால் வர்மாவின் தெலுங்குப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. ஒரேநாளில் நடிகை ஊர்மிளாவுக்கு உச்சபட்ச நட்சத்திர அந்தஸ்து கொடுத்தவர். அவர் இயக்கும் `அட்டாக்' படத்தின் கதையை சொன்னபோது அதில் எனக்கு மெக்கானிக் வேடம் என்றபோது கதையும் பிடித்தது. என் கேரக்டரும் பிடித்தது. அதுவும் பெண் மெக்கானிக் என்பதே நடிப்புக்கு சவாலான வேடம். தைரியமாக செய். பெரிய வெற்றி தேடிவரும் என்று மட்டும் சொன்னார். நடிக்கும் போது எப்படி வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி விடுவார். அதனால் அந்த படத்தைப் பொறுத்த வரையில் நான் மெக்கானிக்காகவே மாறி விட்டேன். அடுத்து சர்வானந்த் ஜோடியாக எக்ஸ்பிரஸ் ராஜா படத்தில் நடிக்க கேட்டார்கள். இதுவும் பரபரப்பான கதைக்களம் தான். எனக்கும் நடிக்க அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர். நடித்து வருகிறேன். அதனால் தமிழைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. தமிழிலும் நடிப்பைத் தொடர்வேன். புகழ் படம் ரிலீசான பிறகு தமிழிலும் நிச்சயம் அழைப்பார்கள்.''

தமிழில் யாருடன் ஜோடி சேர ஆசை?

“கமல் சாருடன். அவர் நடிப்பு ரொம்பவே பிடிக்கும். அவர் படம் பார்க்கத் தொடங்கியதில் இருந்தே நான் அவர் ரசிகை. தெலுங்கில் ராம்சரணுடன் சேர்ந்து நடிப்பது என் கனவு. அதுவும் விரைவில் நனவாகும்.''

நடிப்பில் உங்களுக்கு போட்டியாக யாரை கருதுகிறீர்கள்?

“எனக்கு நான் தான் போட்டி. கிடைக்கிற ஒவ்வொரு கேரக்டர்களிலும் என்னை செதுக்கிக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு இதுதான் என் ஆசை.''

Leave a Reply