BREAKING NEWS

“நான் அழமாட்டேன்…. யாரையும் அழ வைக்கவும் மாட்டேன்..!’’

உற்சாக காந்திக்கு இன்னொரு முகமும் இருந்தது. முசோலினியைச் சந்தித்த நிலையில், ‘பாசிஸம் நிலைத்து நிற்காது… அது சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்துவிடும்’ என்று எச்சரித்தார் அவர். இத்தாலியில் போப்பாண்டவரை அவர் சந்திக்க முடியாமல் போனதும், முசோலினியைச் சந்திக்க நேர்ந்ததும் உண்மையிலேயே வரலாற்று முரண்.

அதேபோன்ற ஒரு வரலாற்று முரண்தான், 1947ல் அரங்கேறியது. எந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கேட்டு காந்தி போராடினாரோ, அந்த இந்தியாவை இரண்டாகப் பிளந்து அவரிடம் கொடுத்தது பிரிட்டன். ‘உன் குழந்தையை இரண்டாக வெட்டி உன்னிடமே கொடுத்துவிடுகிறோம்…  இரண்டுக்கும் தனித்தனிப் பெயர் சூட்டிக்கொள்’ என்று கூசாமல் பேசியது.  ‘சுதந்திரம் தானே கேட்டாய்…. கொண்டாடிக் கொள்..!’ என்று நக்கலடித்தது.

“நாட்டைக் கூறுபோடுவதாயின், அதற்குமுன், என் உடலைக் கூறு போட்டுவிடுங்கள்” என்று மன்றாடினார் காந்தி.  ஜின்னா எடுத்த நிலை  அதற்கு நேர்மாறானதாக இருந்தது. “இந்தியாவைப் பிரிப்போம், அல்லது இந்தியாவை அழிப்போம்” என்றார் அவர். பிரிட்டிஷ் அரசு, ஜின்னாவின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கிக்கொண்டது. இந்தியா பிரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில், நொந்துபோனார் காந்தி. அவரது வேதனை, பிரார்த்தனைக் கூட்ட உரைகளில் எதிரொலித்தது.

1947 ஜூலை 20-ம்தேதி பிரார்த்தனைக் கூட்டத்தில், காந்தியிடமே இதுபற்றி  கேள்வி எழுப்பினார்கள். ‘‘உங்களது பிரார்த்தனைக் கூட்ட உரைகளில் சமீபகாலமாகக் காணப்படும் மகிழ்ச்சியின்மை குறித்து, மக்கள் கவலைப்படுகிறார்கள்…! எந்த சுதந்திரத்துக்காக நீங்கள் போராடினீர்களோ, அந்த சுதந்திரம் நெருங்கி வந்துவிட்டது… இப்படியொரு வெற்றியைக் கொண்டாடாமல் துவண்டுபோகலாமா?” என்கிற அந்தக் கேள்வி அர்த்தமுள்ளது என்பதை காந்தி ஒப்புக்கொண்டார்.

மெல்லிய குரலில் அந்தக் கேள்விக்குப் பதிலளித்தார் காந்தி. “அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெறப் போகிறோம் என்பது உண்மைதான்! அதேசமயம், என்னுடைய தேசம் இரு கூறாக ஆக்கப்படுகிறதே… அதற்காக நான் எப்படி மகிழ்ச்சியடைய முடியும்” என்று அவர் திருப்பிக் கேட்டபோது, பிரார்த்தனைக் கூட்டத்தில் கனத்த மௌனம். அந்த மௌனத்தையும் அவரே கலைத்தார். “நான் அழமாட்டேன்…. யாரையும் அழ வைக்கவும் மாட்டேன்!  நவகாளி மக்களைப் போல கண்ணீரில் மூழ்கியிருக்கும் அப்பாவி மக்களைச் சந்தித்து அவர்களது விழிநீரைத் துடைப்பதுதான் இப்போதைக்கு என்னுடைய வேலை” என்றார்.

மத வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நவகாளி போன்ற பகுதிகளுக்குச் செல்ல காந்தி திட்டமிட்ட அதே நேரத்தில், சுதந்திரத் திருநாளை எப்படியெல்லாம்  கொண்டாடுவது என்கிற ஆலோசனைகளில் தீவிரமாக இறங்கியிருந்தது, காங்கிரஸ். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தன்னுடன் வருமாறு காந்தி யாரையும் அழைக்கவுமில்லை, ‘நாங்களும் வரலாமா’ என்று அவர்களில் யாரும் அவரிடம் கேட்கவும் இல்லை.

இதையும் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்தவர்களிடம் சொல்லத் தவறவில்லை, காந்தி. “ஆகஸ்ட் பதினைந்தை விமரிசையாகக் கொண்டாட காங்கிரஸ் விரும்பினால், அந்தக் கொண்டாட்டத்தில் அவர்களோடு சேர்ந்து கொள்ள விரும்புவோர் தாராளமாகச் சேர்ந்து கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை, இரண்டு நாடுகளிலும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களைப் போல இணைந்துவாழும் நாள்தான் உண்மையான கொண்டாட்ட நாள்… அந்த நாளைத்தான் நான் கொண்டாடுவேன்” என்று மனம் விட்டுப் பேசினார். உண்மையில் அது பேச்சு இல்லை, புலம்பல்.  அடித்துக்கொண்டு பிரிவதுடன் வீட்டையும் பிரித்துக் கொள்ளும்  அண்ணன் தம்பியைப் பார்த்து, அந்த வீட்டைப் பாடுபட்டுக் கட்டிய ஒரு தந்தையின் புலம்பல்.

காந்தி என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது நேருவுக்கும் பட்டேலுக்கும்  தெரிந்தே இருந்தது. ஆனால், அதைப் பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாராக இல்லை. ஜின்னாவுடன் நாட்டைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு அவர்கள் எப்போதோ வந்துவிட்டார்கள். காங்கிரஸின் இருபெரும் தலைவர்களாக அவர்கள் உருவெடுத்தாயிற்று! காந்தியின் அடையாளம் இனிமேல் அவர்களுக்குத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால், இனி அவர்களுக்கு அந்த அடையாளம் ஒரு தேவையற்ற சுமை.

1947 ஜூலை 22-ம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையில் தேசியக் கொடி குறித்து நேரு பேசியதைக் கேட்டவர்கள், காந்தியின் அடையாளம் கொடியில் கூட இருந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் எவ்வளவு உறுதியாக இருந்தார்கள் என்பதை வெளிப்படையாக உணர்த்தியது.

“தேசியக் கொடி கிடைமட்ட வடிவில், இரண்டுக்கு மூன்று என்கிற விகிதத்தில், மூவண்ணத்தில் இருக்கும். மூன்று வண்ணமும் கிடைமட்ட வடிவில் சரிசமமான அளவில் இருக்கும். மேலே காவி நிறம், இடையில் வெண்மை, கீழே பச்சை நிறத்துடன், இடையிலுள்ள வெண்மைப் பகுதியில் சாரநாத் ஸ்தூபியிலுள்ள அசோகச் சக்கரம் நீல நிறத்தில் இடம்பெற்றிருக்கும்” என்று நேரு அறிவித்தார்.

காந்தி உருவாக்கிய காங்கிரஸின் மூவர்ணக் கொடி, ஒரு கட்சிக்  கொடியாக பாவிக்கப்படாமல், தேசியக் கொடியாகவே பாவிக்கப்பட்டு வந்தது. அந்தக் கொடியின் நடுவில் காந்தியின் அடையாளமான ராட்டை இருந்தது. அது கிராமப்புற மேம்பாடு மற்றும் சுதேசியின் அடையாளமாக இருந்தது. அதை நீக்கிவிட்டு, அதே மூவண்ணக் கொடியில் அசோகச் சக்கரத்தைப் பொருத்தி தேசியக் கொடியாக அறிவித்ததன் பின்னணியில் காங்கிரஸ் தலைவர்களும் இருந்தனர். அவர்களில் பலரும் ராட்டையை கடந்த காலத்தின் அடையாளமாகவும், பெண்மையின் அடையாளமாகவும் கருதியவர்கள்.

காந்தி ராட்டையை நேசித்த அளவுக்கு, நேரு அதை நேசிக்கவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். ஆனால், அவர் அதை ஒட்டுமொத்தமாக விலக்கிவிடவுமில்லை. பிடித்ததோ பிடிக்கவில்லையோ, சமயங்களில் காந்தியோடு உட்கார்ந்து ராட்டையில் நூல் நூற்கத் தயங்கவில்லை நேரு.  காந்தியின் ஒவ்வொரு அசைவுக்கும் ஓராயிரம் அர்த்தம் இருக்கும் என்கிற நம்பிக்கை, ராட்டைக்கு முன் அவரை உட்கார வைத்திருக்கக் கூடும். அந்த நேருதான், காந்தியின் ராட்டை நீக்கப்பட்டு தேசியக் கொடியில் அசோகச் சக்கரம் இடம்பெறுவதை அறிவித்தார்.

அசோகரது சாரநாத் தூணிலிருந்துதான், அந்த அசோகச் சக்கரம் தத்தெடுக்கப்பட்டது. அது, அந்தச் சக்கரம், அசோகரின் போர்வீரர்கள் தங்கள் கேடயங்களில் பொறித்திருந்த போர்ச் சின்னம். ராட்டை நீக்கப்பட்டதைக் காட்டிலும், போர் அடையாளங்களில் ஒன்று தேசியக் கொடியில் இடம்பெறுவதைத்தான் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை. போர்களை விரும்பாத அகிம்சாவாதியான அவர், தேசியக் கொடி குறித்த தனது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

“கொடி வடிவமைப்பில் உள்ள கலைநயம் எப்படியிருந்தாலும், இத்தகைய ஒரு செய்தியைத் தாங்கியுள்ள கொடியை வணங்குவதில் எனக்கு உடன்பாடில்லை” என்று பகிரங்கமாகச் சொன்னார் காந்தி. எதுதான் காந்தி என்று கேட்பவர்கள், இதுதான் காந்தி என்பதைப் புரிந்து கொண்டாக வேண்டும்.

எந்தக் கொடியை வணங்குவதில் தனக்கு உடன்பாடில்லை என்று காந்தி சொன்னாரோ, அந்தக் கொடியை வணங்கியே ஆகவேண்டும் என்று வற்புறுத்துகிற போக்கு, சினிமா தியேட்டர்களில் கூட ‘எழுந்துநில்லுங்கள்’ என்று அறிவிக்குமளவுக்குப் போன இன்றைய நிலையில், காந்தி என்கிற மானுடன் நேர்மையுடன் பேசுகிற நல்லாசிரியனாக நமக்கு முன் உயர்ந்து நிற்கிறான். உண்மையில், அந்த மனிதனுக்காகத் தான் நாடு எழுந்து நிற்கவேண்டும்.

-புகழேந்தி தங்கராஜ்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *