- செய்திகள், மாநிலச்செய்திகள்

நாடு முழுவதும் உள்ள தங்க நகை வர்த்தகர்கள் இன்று முதல் 3 நாள் ‘ஸ்டிரைக்’

மும்பை, மார்.2:-

தங்க நகைகளுக்கு புதிய வரி விதிப்பு, ரூ.2 லட்சத்துக்கு மேலாக நகை வாங்கினால் பான் கார்டு கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் உள்ள நகைகடை வர்த்தகர்கள் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்களுக்கு கடைஅடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி நேற்றுமுன்தினம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தங்கநகைகளுக்கு ஒரு சதவீதம் கலால்வரி விதித்தார். இந்த அறிவிப்பு தங்க நகை வர்த்தகர்கள், வடிவமைப்பாளர்கள், சில்லரை வணிகர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

இது குறித்து அனைத்து இந்திய கற்கள் மற்றும் நகை வர்த்தகர்கள் அமைப்பின் தலைவர் ஜி.வி. ஸ்ரீதர் மும்பையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

மத்திய அரசின் பட்ஜெட்டில் நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே  ரூ.2 லட்சத்துக்கு மேல் நகைவாங்கினால் பான் கார்டு கட்டாயம் என்ற விதியால் நகை வியாபாரம் 20 முதல் 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.  இதை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்நிலையில், புதிதாக விதிக்கப்பட்ட ஒரு சதவீத கலால் வரியை மீண்டும் அறிமுகப்படுத்தியது பெரும் சிக்கலை எங்களுக்கு உருவாக்கும்.

இதற்கு முன்பு கடந்த 2005, 2012-ல் இதுபோல் கலால்வரி அறிமுகம் செய்யப்பட்டது, அதன் பின் திரும்பப்பெறப்பட்டது. ஏனென்றால், இந்த துறையில் இருப்போர் பெரும்பாலானவர்கள் கல்வியறிவு குறைவானவர்கள் என்பதால், கலால் வரி தொடர்பான ஆவணங்களை கையாளுவதில் சிரமம் இருக்கும் என்பதால் அது திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், எங்களின் இந்த புதிய அறிவிப்பு குறித்து அனைத்து உறுப்பினர்களோடு நேற்று கலந்தாய்வு நடத்தினோம். இந்த கூட்டத்தின் முடிவில், நாளை(இன்று) முதல் 3 நாட்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தில் நாடுமுழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட நகை வர்த்தக அமைப்புகள், உற்பத்தியாளர்கள், சில்லரை வணிக அமைப்புகள், கலைஞர்கள் கலந்துகொள்வார்கள்.  மேலும், நிதி அமைச்சரைச் சந்தித்து எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க சிறப்பு குழு என்று விரைவில் செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply