- செய்திகள், மாநிலச்செய்திகள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிரணாப் முகர்ஜி உரையுடன் இன்று தொடங்குகிறது

புதுடெல்லி, பிப்.23-

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையுடன் இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் புயலைக் கிளப்ப காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. சவாலை சந்திக்க, மத்திய அரசு தயாராகி வருகிறது.

குற்றச்சாட்டு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. முதல் நாளான இன்று, இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்காக, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று டெல்லியில் கூட்டி இருந்தார்.

இந்த கூட்டம் வழக்கமான சம்பிரதாய நடைமுறைதான் என்று குறை கூறிய எதிர்க்கட்சிகள், சபையை சுமுகமாக நடத்துவதற்காக பிரதமரோ அல்லது ஆளும் பா.ஜனதாவோ, எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளன.

முதல் நாளிலேயே

இந்தக் கூட்டத்தில் புயலைக் கிளப்பி மத்திய அரசை ஓரங்கட்டுவதற்காக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தயாராகி வருகின்றன. இன்று குடியரசுத் தலைவர் உரையைத் தொடர்ந்து கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.

முதல் நாளான நாளையே (புதன்கிழமை) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) விவகாரத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே மாநிலங்களவையில் கடும் மோதல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. மசோதா

முதல் கட்ட கூட்டத் தொடரின்போது முக்கிய மசோதாக்கள் எதையும் நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்காது என்று தெரிகிறது. ஒருமித்த கருத்து எட்டப்பட்ட மசோதாக்களை மட்டுமே, தகுதியின் அடிப்படையில் நிறைவேற்ற அனுமதிக்கப்படும் என்று, எதிர்க்கட்சி தலைவர்களான குலாம் நபி ஆசாத் (மாநிலங்களவை), மல்லிகார்ஜுன கார்கே (மக்களவை) ஆகியோர் தெரிவித்தனர்.

ஜி.எஸ்.டி. வரி மசோதா போன்ற முக்கிய மசோதாக்கள், 2-ம் கட்ட கூட்டத் தொடரின்போதாவது நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டதற்கு, நேரடியாக பதில் அளிக்க கார்கே மறுத்துவிட்டார். அது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று மட்டும் அவர் தெரிவித்தார்.

பாசிச ஆட்சி

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யச்சூரி, நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை, ஜெர்மனியில் ஹிட்லரின் பாசிச ஆட்சிக்கு ஒப்பிட்டார். இரண்டாம் உலகப்போருக்கு காரணமான சம்பவம் ஜெர்மனியில்  செயற்கையாக உருவாக்கப்பட்டது போல், ஜே.என்.யு. சர்ச்சை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தாக்குதல் தொடுத்தார்.

இந்த தொடர் உள்ளிட்ட கடந்த 3 அல்லது 4 கூட்டத் தொடர்களிலும், இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாடாளுமன்ற கூட்ட  நிகழ்ச்சி நிரலை பா.ஜனதா தயாரித்து இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு நம்பிக்கை

அதே நேரத்தில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, அனைத்துக் கட்சி கூட்டம் ஆக்கபூர்வமாக நடைபெற்றதாகவும், நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்பதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்து இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் சிறிய கட்சிகள், தங்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிட்ட அவர், ஜே.என்.யு மாணவர் விவகாரம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார். ஜி.எஸ்.டி. உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் முனைப்புடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முடக்கம் ஏன்?

கடந்த இரு கூட்டத் தொடர்களும் முடக்கப்பட்டதற்கு மத்திய அரசே காரணம் என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பா.ஜனதா தலைவர்களின் சர்ச்சைக்குரிய அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியும் ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்றார்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டால், எதிர்க்கட்சிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, அந்த குழுவுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும், மத்திய அரசை அவர் வலியுறுத்தினார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதிப் பந்தோபாத்யாயே பேசும்போது, நாடாளுமன்றம் செயல்படுவதில் ஆளும் கட்சிக்கு முக்கிய பங்கு உண்டு என்று வலியுறுத்தினார்.

ரெயில்வே பட்ஜெட்

இந்த கூட்டத் தொடரில், வருகிற 29-ந்தேதி அன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக, 26-ந்தேதி  பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். 25-ந்தேதி (வியாழக்கிழமை), ரெயில்வே பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தின் முதல் கட்ட தொடர், மார்ச் 16-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட கூட்டத் தொடர் ஏப்ரல் 25-ந்தேதி முதல் மே 13-ந்தேதி வரையிலும் நடைபெறும்.

—–

Leave a Reply