- செய்திகள், மாநிலச்செய்திகள்

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி, ஏப்.15:-

நாடாளுமன்ற மக்களவைக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் குழு பரிசீலனை செய்து வருகிறது.

அதிக செலவினம்

நாட்டில் தற்போது நாடாளுமன்ற மக்களவை மற்றும் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள சட்டசபைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தனித் தனியாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, ஒவ்வொரு தடவையும் பாதுகாப்புக்காக மத்திய படைகளை நிறுத்துதல், வாக்குப் பதிவுக்கான பணியாளர்களை நியமித்தல் போன்ற காரணங்களால் அளவுக்கு அதிகமான செலவுகள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் வருங்காலத்தில் மக்களவைக்கும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்துக்கான சட்டம் மற்றும் பணியாளர் நிலைக்குழு பரிந்துரை அளித்து இருந்தது.

பிரதமர் ேமாடியும் ஆதரவு

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு சமீபத்தில் நடைபெற்ற பா.ஜனதா கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடியும் தன்னுடைய ஆதரவை வெளியிட்டு இருந்தார். கடந்த 1999-ம் ஆண்டில் மத்திய சட்ட கமிஷனும், தன்னுடைய அறிக்கை ஒன்றில் இதேபோன்ற யோசனையை ஆதரித்து இருந்தது.
தேர்தல் சட்டப்படி ஒரு அவையின் காலம் முடிவடைவதற்கு 6 மாதங்களுக்கு முன்னால்  தேர்தல் நடத்தப்படலாம். நெருக்கடி நிலை காலங்களைத் தவிர மற்ற எந்தவிதமான சூழ்நிலையிலும், குறிப்பிட்ட காலம் முடிவடைந்த பின்னர் அவை நீடிக்கக்கூடாது.

நிலைக்குழு யோசனை

எனவே, தற்போதைய சூழலில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு மாற்று முறை மற்றும் செயல்படுத்தத்தக்க நடைமுறை ஒன்றையும் நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்து இருக்கிறது. அதன்படி மக்களவையின் பாதி காலத்தின்ேபாது சில மாநிலங்களுக்கும், மீதம் உள்ள மாநிலங்களுக்கு மக்களவை காலம் முடியும்போதும் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

மேலும், சட்ட  சபைகளுக்கான முதல் கட்ட தேர்தலை வருகிற நவம்பர் மாதம் நடத்தலாம் என்றும் அந்த குழு முன்மொழிந்து இருந்தது. அப்போது, 6 மாதங்கள் முதல் ஓராண்டுக்குள் சட்டசபை பதவிக்காலம் முடியக்கூடிய தருவாயில் உள்ள மாநிலங்கள் மற்றும் சட்டசபை காலம் முடிந்த மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

ஒருமித்த கருத்தில் சிக்கல்

இதனால், சில மாநில சட்டசபைகளின் கால அளவு நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படும். அதேநேரம், சில சட்டசபைகளின் கால அளவு குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே, அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடைய ஒருமித்த கருத்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் அந்த கமிட்டி ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனிடையே, மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களுக்கு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்  வாக்குப்பதிவு எந்திரங்களில் 9 லட்சத்துக்கும் அதிகமானவை காலாவதியாகும் நிலையில் உள்ளன. எனவே, 14 லட்சம் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க  வேண்டும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கேட்டு  இருந்தது.

மத்திய அமைச்சர்கள் குழு

இந்தப் பின்னணியில், மத்திய உள்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், சட்ட அமைச்சர் சதானந்த கவுடா,  வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கான  மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று  அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 11-ந் தேதி அந்த குழுவின் கூட்டம் முதல் தடவையாக நடைபெற்றது. அதில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே  நேரத்தில் தேர்தல் நடத்துவது மற்றும் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்குவது  போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தகுதி உள்ளதா?
இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது  தொடர்பாக பரிந்துரைகள் அளிப்பதற்கு தகுதி வாய்ந்த ஒரு அமைப்பாக அந்த குழு இருக்காது  என்று கருதுவதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், குறைந்த செலவில் வாக்குப்பதிவு  எந்திரங்களை வாங்குவது தொடர்பாக சாதகமான வழிகளை முதலில் அந்த கமிட்டி  பரிந்துரை செய்யும் என்றும், அதன் பின்னர் தேர்தல்களை ஒரே நேரத்தில்  நடத்துவது தொடர்பாக பரிந்துரைகளை வழங்கலாமா என்ற விவகாரம் குறித்து ஆய்வு  செய்யலாம் என்றும் குறிப்பிட்டார்.

ஆதரவும், எதிர்ப்பும்

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு அ.தி.மு.க மற்றும் அசாம் கண பரிஷத் ஆகிய கட்சிகள் இந்த யோசனைக்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரோன்மணி அகாலி தளம் கட்சி ஆதரவு வெளியிட்டுள்ள  போதிலும், சில சந்தேகங்களை வெளியிட்டு உள்ளது.

அதேநேரம்,  காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த யோசனையை  நிராகரித்து உள்ளன. அதேபோன்று, தேசியவாத காங்கிரஸ், இந்திய  கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.
——————–

Leave a Reply