- செய்திகள்

நாடார் சமுதாயத்தின் மீதான அவதூறை அகற்றுவதில் அலட்சியம் காட்டுவதா? டாக்டர் ராமதாஸ் அறிக்கை…

சென்னை, ஆக. 25-
நாடார் சமுதாயத்தின் மீதான அவதூறை அகற்றுவதில் அலட்சியம் காட்டுவதா? என்று, டாக்டர் ராமதாஸ் கூறினார்.
இது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சி.பி.எஸ்.இ.புத்தகத்தில்
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில், "காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள்" என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றுள்ளது. அதில் சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பில் இடம்பெற்றுள்ள பத்தியில் ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, நாடார்கள் சாணார் எனப்படும் கீழ்சாதியை சேர்ந்தவர்கள் என்றும், நாடார் சமுதாய பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும்,   அவர்கள் மேலாடை அணிவதற்காக கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும் திரித்து எழுதப்பட்டிருந்தது.
வரலாற்றுப்பிழை
நாடார்கள் குறித்த இந்த தகவல்கள் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என்றும், இதை உடனடியாக திருத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 25.10.2012 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்கள். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் இது குறித்து அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்பின்  4 ஆண்டுகள் ஆன பிறகும் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பகுதி இன்று வரை நீக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதன்பின்னணியில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாகவே தோன்றுகிறது.
தியாகம்
உண்மையில் நாடார் சமுதாயத்தினர் குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் ஆவர். மூவேந்தர்களின் ஆட்சியில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் நாடார் சமுதாயத்தினர் தான் இருந்துள்ளனர். இந்திய விடுதலைப் போரில் நாடார் சமுதாயத் தலைவர்கள் மிகப்பெரிய தியாகங்களை செய்துள்ளனர்.  தமிழகத்தின் வணிகம் மற்றும் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாகவும் அவர்கள் திகழ்கின்றனர்.  இத்தகைய சிறப்பு மிக்க நாடார் சமுதாயத்தினர் குறித்து பாடநூலில் திட்டமிட்டு திரித்து எழுதப்பட்ட  தவறான வரலாற்றை திருத்த மத்திய அரசு இவ்வளவு தாமதம் செய்வதன் காரணம் புரியவில்லை.
காமராஜருக்கு துரோகம்
ஜவகர்லால் நேருவுக்கு பிறகு தம்மைத் தேடி வந்த பிரதமர் பதவியை உதறித் தள்ளியதுடன், அடுத்து இரு பிரதமர்களை தீர்மானித்த கிங் மேக்கராக திகழ்ந்த காமராஜர், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் பிதாமகனாக திகழ்ந்த காமராஜரின் வரலாற்றை முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் படித்திருந்தால், நாடார்கள் குறித்த அவதூறு  தகவல்கள் தவறு என்பதை உணர்ந்து உடனடியாக நீக்கியிருப்பார்கள். ஆனால், இந்த சர்ச்சை எழுந்து சுமார் 20 மாதங்கள் ஆட்சியில் இருந்தபோதும் அதை சரி செய்யத் தவறியதன் மூலம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காமராஜருக்கு பெருந்துரோகம் செய்து விட்டது. அதன்பின் பதவியேற்ற  தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அமைச்சராக உள்ள தமிழகத்தின் பொன்.ராதாகிருஷ்ணன் நாடார் சமுதாயத்தின் மீதான அவதூறை நீக்க நடவடிக்கை எடுக்காததும் துரதிருஷ்டவசமானதாகும்.
அகற்றவேண்டும்
நாடார் சமுதாயம் குறித்த தவறான வரலாற்றுப் பதிவு உடனடியாக திருத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதில் அலட்சியம் காட்டுவது நாடார் சமுதாயத்திற்கு செய்யப்படும் துரோகம் ஆகும். எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் நாடார்கள் பற்றி இழிவாக கூறப்பட்டிருக்கும் தகவல்களை அகற்றி விட்டு, உண்மை வரலாற்றை பதிவு செய்ய வேண்டும்; அத்துடன் அய்யா வைகுந்தரின் போராட்ட வரலாற்றை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

Leave a Reply