- செய்திகள்

நளினி சிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் நிதி நிறுவன மோசடி வழக்கு…

புதுடெல்லி, ஆக.25-

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், பிரபல வக்கீலுமான நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் சாரதா நிதி நிறுவனம் பல ஆயிரம் கோடி மோசடி செய்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் சுதீப்தா சென் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். சாரதா நிதி நிறுவன மோசடியில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோதமாக பண பரிவர்த்தனையும் நடைபெற்றதால் அமலாக்க துறையும் இதுபற்றி விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவியும், பிரபல வக்கீலுமான நளினி சிதம்பரத்திற்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி உள்ளது.

கொல்கத்தாவில் உள்ள விசாரணை அதிகாரி முன்பு அடுத்த மாதம் தொடக்கத்தில் ஆஜராகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் மனோரஞ்சனாசிங் சொந்தமாகத் தொலைக்காட்சி சேனல் தொடங்க முயற்சித்ததாகவும், இதற்காக சுதீப்தாசென் பல கோடி வரை கடன் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நளினி சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளதாக சுதீப்தாசென் சி.பி.ஐ-க்கு எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக அமலாக்க துறையும், சி.பி.ஐ-யும் ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தி இருந்தனர். தற்போது இந்த விவகாரத்தில் புதிய ஆதாரம் கிடைத்து இருப்பதால் நளினி சிதம்பரத்திடம் மீண்டும் விசாரிப்பதற்காக அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Leave a Reply