- செய்திகள், மாநிலச்செய்திகள்

நரேந்திரமோடி பதவிக்காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட குஜராத் நில ஒதுக்கீடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு

புதுடெல்லி, பிப்.7-

குஜராத் மாநில முதல்-அமைச்சராக பதவி வகித்தபோது அனுமதி வழங்கப்பட்ட அனைத்து நில ஒதுக்கீடுகள் குறித்தும், உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று, காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

ஊழல் புகார்

கேசுபாய் படேலைத் தொடர்ந்து, கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடித்த அவர், 2014-ல் பிரதமர் ஆனதும், ஆனந்தி பென் படேல் முதல்-அமைச்சர் ஆனாார்.

நரேந்திர மோடி முதல்-அமைச்சராக இருந்தபோது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆனந்தி பென் படேல் மீது, அவருடைய மகள் அனார் படேலுடன் வர்த்தக தொடர்புடைய நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அரசு நிலம் ஒதுக்கியதாக ஊழல் புகார் எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்ற மேற்பார்வையில்

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தித் தொடர்பாளருமான ஆனந்த் சர்மா, இந்த ஊழல் குறித்து நேற்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

‘‘நரேந்திர மோடி முதல்-அமைச்சராக இருந்தபோது, குஜராத் மாநிலத்தில் அனுமதி வழங்கப்பட்ட நில ஒதுக்கீடு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு  அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

எடுபிடிகளுக்கு ஒதுக்கீடு

இந்த கால கட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் அற்ப விலைக்கு கார்பரேட் நிறுவன எடுபிடிகளுக்கும் மற்றவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையில், மோடி கை சுத்தமானவர் என்பதை நிரூபிக்க வேண்டும்.

ஆனந்தி பென் படேல் வருவாய் துறை அமைச்சராக இருந்தபோது, அவருடைய மகள் அனார் படேல் தொடர்புடைய நிறுவனத்துக்கு 250 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து மோடிக்கு தெரியுமா? விலை நிர்ணயம் உள்ளிட்ட அது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்க வேண்டும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் குஜராத் முதல்-அமைச்சர் ஆனந்தி பென் பதவி விலக வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது.

Leave a Reply