- சினிமா, செய்திகள்

நடிப்புக்கு சவாலாக அமைந்த `மனிதன்'

 

உதயநிதியின் நடிப்பில் 5-வது படமாக வரவிருப்பது மனிதன். `என்றென்றும் புன்னகை' வெற்றிப் படம் தந்த அகமது இயக்க, இசையமைக்கிறார், சந்தோஷ் நாராயணன். மதி ஒளிப்பதிவு. “2013-ல் இந்தியில் சுபாஷ்கபூர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிவாகை சூடிய `ஜாலி எல்.எல்.பி.' படத்தைத்தான் தமிழுக்கு ஏற்றவிதத்தில் சிற்சில மாற்றங்களுடன் தந்திருக்கிறோம்'' என்கிறார், இயக்குனர்.
படம் பற்றி நாயகன் உதயநிதி கூறும்போது, “இந்தப் படத்தில் நான் வக்கீலாக வருகிறேன். கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் என்பதால் நீள நீள வசனங்கள் எல்லாவற்றையும் சவாலாக எடுத்து பேசியிருக்கிறேன். வக்கீல் கேரக்டர் என்றாலும் காதல், காமெடி என எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு. அதோடு ஒரு முக்கிய பிரச்சினையையும் படம் சொல்கிறது.
படத்தில்  ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என 2 நாயகிகள். இவர்களில் ஹன்சிகா என்அத்தை பெண்ணாக வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிகையாளராக வருகிறார். நீதிபதியாக ராதாரவி, சீனியர் வக்கீலாக பிரகாஷ்ராஜ், என் தாய் மாமாவாக விவேக்  என எல்லாருமே கதைக்குள் அப்படி பொருந்திப் போனார்கள்…'' என்றவரிடம்,
`படத்துக்கு ரஜினியின் மனிதன் படத்தலைப்பு எப்படி?' கேட்டோம்.
“கோர்ட் சம்பந்தப்பட்ட கதை என்பதால் முதலில் `பராசக்தி' என்ற பெயரை யோசித்தோம். பிறகு படத்தில் என் கேரக்டரின் பெயர் சக்தி என்பதால் அந்தப் பெயரை வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். விவேக் சார் தான் `மனிதன்' தலைப்பு தான் இந்தப் படத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்றார். உடனே மனிதன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஏவி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களிடம் போனில் பேசி தலைப்பை வாங்கி விட்டோம். கேட்டதும் தலைப்பை கொடுத்த அவருக்கும் எங்கள் நன்றி. இப்போது படத்தை பார்த்தபோது மனிதன் தலைப்பைத் தவிர வேறு எந்த தலைப்புக்கும் பொருந்தாது என்றே தோன்றுகிறது என்கிறார்.

Leave a Reply