- சினிமா, செய்திகள்

நடிகர் நாசரின் மிகப்பெரிய ரசிகன் நான்

பிரபல இந்திப்பட இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி பெருமிதம்
சுதா இயக்கத்தில் நடிகர் மாதவன் நாயகனாக நடித்த `இறுதிச்சுற்று' படத்தின் ஆடியோ விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிரபல இந்திப்பட இயக்குனர் ராஜ்குமார்ஹிரானி பேசும்போது `நான் நடிகர் நாசரின் நடிப்புக்கு மிகப் பெரிய ரசிகன். டைரக்டர் பாலாவின் படங்களையும் விரும்பி ரசிப்பேன்' என்றார். அவர் மேலும் பேசியதாவது.

“எனக்கு தமிழில் மொத்தம் 15 வார்த்தைகள் தெரியும். அதை வைத்துக் கொண்டு தமிழ்ப் படங்களை பார்க்க முடியாது என்பதால் சப் டைட்டில் போட்ட படங்களை மட்டும் பார்ப்பேன். இங்கிருக்கும் அனைவருக்குமே மொழி ஒரு தடையல்ல. இங்கள்ளவர்கள் தமிழில் பேசியதை என்னால் மொழி வடிவில்  புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அதில் கலந்திருந்த உங்கள் அன்பை பாசத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த வகையில் மும்பையில் இருப்பவர்கள் என் மீது காட்டும் அன்பை விட சென்னையில் அதிக அன்பு கிடைத்திருக்கிறது.

ஒருநாள் இரவு 11.30 மணிக்கு நடிகர் மாதவன் எனக்கு போன் செய்து `உங்களை பார்க்க வேண்டும். வரலாமா?' என்று கேட்டார். `வாங்க' என்றேன். 12 மணிக்கு வந்தார். 20 நிமிடம் இந்தக் கதையை சொன்னார். அப்படி உருவானது தான் இந்தப் படம். படத்தில் மாதவனின் அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது. நடிகர் நாசர்முக்கிய கேரக்டரில் வருகிறார் . நாசருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். டைரக்டர் பாலாவின் படங்களையும் விரும்பி ரசிப்பேன். இங்கிருந்து (தமிழில்) ஹேமமாலினி, ஸ்ரீதேவி போன்றோர் இந்திக்கு வந்து மிகப்பெரிய இடத்தை பிடித்தார்கள். அதுமாதிரி இங்குள்ள நடிகர்களும் இந்திக்கு வரவேண்டும்.''

நடிகர் சூர்யா பேசும்போது, “மாதவன் தமிழ்நாட்டின் சொத்து. மாதவன் நடித்த படம் ரிலீசாகிற நாளில் என் படமோ தம்பி கார்த்தி படமோ ரிலீசானால் கூட, முதலில் மாதவன் படம் பார்க்கப்போகிற குடும்பம் எங்களுடையது'' என்றார்.

விழாவில் படத்தின் ஆடியோவை டைரக்டர் பாலா வெளியிட,  நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார்.

Leave a Reply