- செய்திகள்

த.மா.கா.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க.வுக்கு காங்கிரஸ் நிபந்தனை

 

‘‘குழப்பங்களுக்கு ஆரம்பத்துலயே முற்றுப்புள்ளி வைச்சிட்டாங்க பா… ’’ என்று பிரஸ் கிளப்பில் விவாதத்தை தொடங்கி வைத்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.
‘‘யாரைப் பத்தி சொல்றீங்கோ…?’’ என்று கேட்டார் நிருபர் ‘ஆல் இன் ஆல்’ அழகுமணி.
‘‘கூட்டணிக்கு தே.மு.தி.க. வராததால, பா.ம.க. த.மா.கா. கட்சிகள் பக்கம் தி.மு.க. பார்வையை திருப்பினதா ஏற்கனவே பேசியிருந்தோம்ல பா… இந்த அடுத்த கட்ட கூட்டணிக் குழப்பத்துல சிக்காம, பா.ம.க  தரப்புல ஆரம்பத்துலயே முற்றுப்புள்ளி வைச்சிட்டாங்க…
‘‘தி.மு.க.வோடு கூட்டணி கிடையாதுன்னு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமா அறிவிச்சிட்டார்… அதோட, ‘வைகோவின் 500 கோடி ரூபாய் புகாரைப் பத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் விசாரிக்கணும்’னு தேர்தல் ஆணையத்துல கோரிக்கை வைச்சு, தி.மு.க. தரப்பை அதிர வைச்சிருக்காங்க பா…
‘‘இதனால பா.ம.க. தனித்துப் போட்டியிடுறது உறுதி ஆகி இருக்கிற நிலையில, அடுத்தகட்டமா, எத்தனை தொகுதிகள்ல அவங்க போட்டியிடுவாங்கன்னு கேள்வி எழுந்திருக்கு… வடக்கு, மேற்கு மாவட்டங்கள்ல 150 தொகுதிகள்ல வரைக்கும் பா.ம.க. போட்டியிடலாம்னு எதிர்பார்ப்பு இருக்கு பா…’’ என்று தகவலை சுருக்கமாக முடித்தார் நிருபர் ‘டெரர்’ டேவிட்.

‘‘திடீர் நிபந்தனையாலதான், இழுபறி ஏற்பட்டிருக்குன்னு சொல்றாங்க வே…’’ என்று அடுத்து பேச ஆரம்பித்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.
‘‘எதைப் பத்தி சொல்றீங்கோ சார்…?’’ என்று கேட்டார் நிருபர் அழகுமணி.
‘‘ஆரம்பத்துல இருந்தே, அ.தி.மு.க. கூட்டணியிலதான் த.மா.கா. சேரும்னு தகவல் வெளியாகிட்டு இருந்துச்சு… அந்த கட்டத்துல, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி உறுதி ஆகிடுச்சு வே…
‘‘இதனால, தி.மு.க. கூட்டணியில த.மா.கா.வுக்கு இனி இடம் இல்லைன்னு பேச்சு அடிபட்டுச்சு… அதேநேரம், அ.தி.மு.க.விடம் த.மா.கா. எதிர்பார்த்த எண்ணிக்கையில, விரும்புற தொகுதிகள்ல கிடைக்காததால இழுபறி ஆகிடுச்சுன்னு தகவல் வெளியாச்சு வே…
‘‘இதை பயன்படுத்திக்க தி.மு.க. தரப்புல முடிவு செஞ்சாங்க… இரண்டாவது முறையா, மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் தன்னை சந்திச்சபோது, த.ம.கா.வை கூட்டணியில சேர்க்க முயற்சிக்கிறதைப் பத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி சொல்லி இருக்காரு வே…
‘‘தி.மு.க.வின் இந்த முடிவுக்கு சோனியாவும், ராகுலும் அதிருப்தி தெரிவிச்சாலும், அதை வெளியே காட்டிக்காம, இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்க முடிவு செஞ்சிருக்காங்க வே…
‘‘அதாவது, ‘தமிழகத்துல 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு சட்டசபை தொகுதி வீதம், 39 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கி ஒப்பந்தம் போட்டுட்டு, த.மா.கா. உடன் பேசிக்குங்க’ன்னு புது நிபந்தனை விதிச்சிட்டாங்களாம்…
‘‘இரண்டு முஸ்லீம் கட்சிக்கு 10 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 25, த.மா.கா.வுக்கு 19 தொகுதிகள் போக மீதமிருக்கிற 180 தொகுதிகள்ல போட்டியிடலாம்னு தி.மு.க. தரப்புல கணக்கு போட்டிருந்தாங்க வே…
‘‘இந்த நிலைமையில, காங்கிரஸ் மேலிடம் கூடுதல் தொகுதி கேட்டு போட்ட புது நிபந்தனையாலதான், தி.மு.க. கூட்டணியில த.மா.கா.வை சேர்க்கிறது இழுபறி ஆகிடுச்சுன்னு சொல்றாங்க வே…
‘‘இந்த சிக்கலை தீர்க்க தி.மு.க.வின் தூதர்களா டி.ஆர்.பாலும், கனிமொழியும் டெல்லிக்குப் போய் சோனியா அல்லது ராகுலை நேர்ல சந்திச்சுப் பேச இருக்கிறதா சொல்றாங்க வே…
‘‘ஆரம்பத்துல இருந்தே அ.தி.மு.க. கூட்டணியை மனசுல வைச்சுதான், ‘வெற்றிக் கூட்டணியில சேருவோம்’னு வாசன் சொல்லிக்கிட்டு இருந்தாராம்… இப்பவும் கூட்டணி விஷயத்துல த.மா.கா.வின் முதல் விருப்பம், அ.தி.மு.க. கூட்டணிதான்னு சொல்றாங்க வே…
‘‘இதுக்காக தொகுதிகள் விஷயத்துல விட்டுக் கொடுத்தாலும், புதுசா சின்னம் பிரச்சினையும் தலை தூக்கினதாலதான், தி.மு.க.வின் பக்கம் த.மா.கா. சாய ஆரம்பிச்சிடுச்சுன்னு சொல்றாங்க வே…
‘‘இந்த சூழ்நிலையில, ‘தி.மு.க. கூட்டணியில காங்கிரஸ் இருக்கிறதால, அந்த கூட்டணியில த.மா.கா. சேர்வதில் பிரச்சினை இருக்கா?’ன்னு நேத்து நிருபர்கள் கேள்வி எழுப்பினாங்க…
‘‘அதுக்கு வாசன், ‘காங்கிரஸ், தேசியக் கட்சி… நாங்க பிராந்திய கட்சி’ன்னு பதில் சொன்னதோட, த.மா.க.வின் சின்னத்தையும் அறிமுகம் செஞ்சுட்டார்… அடுத்து, ஏப்ரல் முதல் வாரத்துல கூட்டணியை அறிவிப்போம்னு சொல்லி, மறுபடியும் யூகங்களுக்கு வாசன் வாசல் கதவை திறந்து விட்டுட்டாரு வே…
‘‘இன்னொரு தகவலையும் சொல்லிடுறேன்… தி.மு.க. கூட்டணியில எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரே ஒரு தொகுதிதான் தர்றதா சொன்னாங்களாம்… ஏற்கனவே முஸ்லீம் ஆதரவு கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கின நிலையில, ஒரு தொகுதியை வாங்கிக்க எஸ்.டி.பி.ஐ. விரும்பலையாம்…
‘‘இதனால முஸ்லீம் கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கின எண்ணிக்கையில ஏதாவது மாற்றம் செஞ்சு, எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒன்றிரண்டு தொகுதிகள் கூடுதலா ஒதுக்க தி.மு.க. முன்வரலாம்னு பேச்சு அடிபடுது வே…’’ என்று கூடுதல் தகவலையும் கூறி பிரஸ் கிளப்பில் விவாதத்தை நிறைவு செய்தார் மூத்த நிருபர் இசக்கிமுத்தன்.***

Leave a Reply