- சினிமா, செய்திகள்

தோழா விமர்சனம் நட்பை கொண்டாடும் படம்.

 

விபத்தில் சிக்கி கழுத்துக்குக் கீழே எவ்வித அசைவுமில்லாத ஒரு கோடீசுவரை கவனித்துக் கொள்ளும் எடுபிடியாக அந்த பங்களாவுக்குள் நுழையும் இளைஞன், அந்த கோடீசுவருக்கே எவ்வளவு முக்கியமானவனாக மாறிப்போகிறான் என்பது கதை. இந்த கதைக்குள் ஒருதலைக்காதல், பாசம், சென்டிமென்ட், நெகிழ்ச்சி என அத்தனையும் ஒருசேர கலந்து கொடுத்து மனதை கொள்ளையடித்து விடுகிறார்கள்.
நெகிழ்ச்சியான இந்த கதைக்குள் கிளைக்கதையாக திருட்டு கார்த்தியின் குடும்ப பின்னணி சுவாரஸ்ய இணைப்பு.

தாயின் வெறுப்புக்கு ஆளாகும் திருடனாக அறிமுகமாகும் கார்த்திக்கு இந்த படம் அவரது கேரியரில் ரொம்பவே முக்கியமான படமாக இருக்கும். நாகார்ஜூனாவுக்கு உதவியாளராக வந்து சேர்ந்தது தொடங்கி படிப்படியாக அவரது அன்புக்குள் ஐக்கியமாகும் இடம் வரை பறந்தது பறந்தபடியே இருக்கிறது கார்த்தியின் நடிப்புக்கொடி. நாகார்ஜூனாவின் செகரட்டரி தமன்னாவை ஒருதலையாக லவ்வும் இடங்கள் அத்தனையும் ரசனை ரசகுல்லா. நின்றுபோன தனது தங்கையின் திருமணத்தை பிரமாண்டமாக நாகார்ஜூனா நடத்தி வைக்க, அதைப்பார்த்து ஆனந்தத்தில் கலங்கும் கார்த்தியின் நெகிழ்ச்சி பார்வையாளர்களின் கண்கள் வரை பதம் பார்க்கிறது.

தெலுங்கு நாயகன் நாகார்ஜூனாவுக்கும் இது மைல்கல் படம். கழுத்துக்கு கீழே முழு உடம்பும் இயங்காதவர் அத்தனை உணர்ச்சியையும் முகத்தில் சர்வ சாதாரணமாக வெளிப்படுத்தும் அத்தனை இடங்களும் ரசனை. தன்னை ஓட்டலுக்கு அழைத்துச் செல்லும் கார்த்தியை நெகிழச்சி ததும்ப பார்க்கிறாரே, அந்த ஒரு இடமே போதும்.

தமன்னா காதல் தேவதையாக வசீகரிக்கிறார். கார்த்தியின் ஒருதலைக்காதலை இவர் அங்கீகரிக்கிற இடம் கவித…கவித..!

பிரகாஷ்ராஜ் வில்லனாக வந்து சிரிக்க வைக்கிறார். பெயிண்ட் ரகசியம் சொல்லும் கார்த்தியிடம் இவர் வெளிப்படுத்துகிற நடிப்புக்குப் பெயர் எக்சலண்ட். கார்த்தியின் வக்கீல் நண்பனாக வந்த நேரம் கொஞ்சமே என்றாலும், விவேக் நிற்பது நம் நெஞ்சமே.

பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கார் சேசிங் காட்சிளில் ஒளிப்பதிவாளர் வினோத்தின் கேமரா வேகம் பிரமிக்க வைக்கிறது. கோபிசுந்தரின் இசையில் பாடல்கள் சுகராகம். அன்புக்கு பேதமில்லை என்ற ஒரு வரியை காவியமாக்கி இருக்கும் வம்சியின் கரங்களை கைவலிக்க குலுக்கலாம்.

Leave a Reply