- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள், மாவட்டச்செய்திகள்

தொழில்துறை பற்றிய புள்ளி விவரங்களை தெரியாமல் பேசி தமிழக மக்களை ஏமாற்ற கருணாநிதி நினைக்கக் கூடாது

சென்னை, ஏப். 4-
‘‘தமிழக தொழில்துறை பற்றிய புள்ளி விவரங்களைப் பற்றி சிறிதும்  கவலைப்படாமல், தமிழக மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை அபகரித்து விடலாம்  என  தி.மு.க தலைவர் கருணாநிதி நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது’’ என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
மத்திய அரசு உரிமம்
இதுதொடர்பாக தமிழக தொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் குறைந்த அளவே முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்து இருப்பதாக செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல்  தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் தொழில் தொடங்க பாதுகாப்புத்துறை, வெடிமருந்துத்துறை போன்ற வெகு சில துறைகள் சம்பந்தப்பட்ட தொழில்கள் தவிர வேறு எந்த தொழில் துவங்கவும் மத்திய அரசால் உரிமம் வழங்கப்படும் நடைமுறை இல்லை.   எனவேதான், மத்திய அரசு தொழில் முனைவோர் அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை அமல்படுத்தியது. தொழில் முனைவோர் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை. பல தொழில் நிறுவனங்கள் இந்த அறிக்கையை தாக்கல் செய்வதும் இல்லை.
தொடர்பு இல்லை
தொழில் துவங்கவும், முதலீடுகள் செய்யவும்  உத்தேசிக்கும் அறிக்கையை தாக்கல் செய்தாலும் அந்த திட்டத்தில்
மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து அவ்வப்போது இந்த தொழில் நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்வதும் இல்லை. இந்த அறிக்கைக்கும், உண்மையில் செய்யப்படுகின்ற முதலீடுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
மேலும், இந்தியாவில் தொழில் தொடங்க உகந்ததாக உள்ள முதல் மூன்று  மாநிலங்களில் தமிழகம் உள்ளது. தொழிலாளர் திறன், உள்கட்டமைப்பு, பொருளாதார சூழ்நிலை, அரசின் ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாக ஆளுமை ஆகிய ஐந்து காரணிகளின் அடிப்படையில் குஜராத், அரியானா மற்றும்  உத்திரப்பிரதேசம் பகுதிகளை உள்ளடக்கிய டெல்லி மாநிலங்களுக்கு அடுத்ததாக தமிழ்நாடு உள்ளது.  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து உள்ளது.
முதல் மாநிலம்
தொழிற்சாலைகளின் எண்ணிக்கை,  தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் எண்ணிக்கை, புதிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பதிவு செய்தல் ஆகிய எந்த புள்ளி விவரங்களை எடுத்தாலும் தமிழகம் முதல் மாநிலமாக தொடர்ந்து இருந்து வருகிறது.

உலக முதலீட்டாளர் மாநாட்டை பொறுத்தவரை, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம்  2,42,160  கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  கையெழுத்திட்ட திட்டங்கள்  அனைத்துக்கும்  30 நாட்களுக்குள்  அனைத்துத் துறை அனுமதிகளும் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார்.  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது கையொப்பமான முதலீட்டு திட்டங்களுக்கு தாமதமின்றி தொடர்ந்து  விரைவாக  நடவடிக்கை எடுக்க  ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அரசு செயலாளர்கள் நிலையில் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குகள்
இந்த விளக்கங்கள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டும்.   எனவே, புள்ளி விவரங்கள் எதைத் தெரிவிக்கின்றன  என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தமிழக மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை அபகரித்து விடலாம் என  தி.மு.க தலைவர் கருணாநிதி நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறாது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறி உள்ளார்.

Leave a Reply