- செய்திகள்

தொழிலாளர் வைப்பு நிதியில் பழைய திட்டமே தொடரவேண்டும் ஜி.கே.வாசன் வேண்டுகோள்…

சென்னை, ஜூலை. 29-
தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த விதிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தாமல், பழைய திட்டத்தை தொடர வேண்டும் என்று, ஜி.கே.வாசன் கூறினார்.
இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அடிப்படை உரிமை
தொழிலாளர்கள் தாங்கள் சேமிக்கும் வைப்பு நிதியிலிருந்து எக்காலக்கட்டத்திலும் அத்தொகையை அவர்கள் பெறுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் புதிய விதிப்படி தொழிலாளர்களின் வைப்பு நிதியில் 36 மாதத்திற்கு வரவு இல்லை என்றால் உடனடியாக அப்பணம் தொழிலாளர்களின் நடைமுறைக் கணக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறது.

மேலும் அடுத்த 7 ஆண்டுகளுக்குள் வைப்பு நிதியில் வரவு இல்லை என்றாலும், அத்தொகையை திரும்ப பெற உரிமை கோரவில்லை என்றாலும் அத்தொகையானது திரும்ப பெறமுடியாத வைப்பு நிதிக்கு மாற்றப்படும். இத்தொகை தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள மூத்த குடிமக்களுக்கான சமூக நலத் திட்டத்திற்கு மாற்றப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கான சமூக நலத்திட்டத்திற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் தொழிலாளர்களின் வைப்பு நிதியிலிருந்து நிதியை இப்புதிய திட்டத்திற்கு மாற்றுவதால் தொழிலாளர்கள் ஏற்கனவே வைப்பு நிதியின் மூலம் பெற்றுவந்த பயனை அடையமுடியாத நிலை ஏற்படும். இது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கின்ற செயலாகும்.
எனவே மத்திய அரசு தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த விதிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தாமல், பழைய திட்டத்தை தொடர வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Leave a Reply