- செய்திகள்

தொடரும் காளையின் வெற்றி நடை சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்தது…

புதுடெல்லி, ஜூலை 29:-

தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் நம் நாட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 184 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 51 புள்ளிகள் அதிகரித்தது.

விறுவிறுப்பு

பங்கு முன்பேர வணிக கணக்கு முடிப்பு தினம் என்பதால் நேற்று வர்த்தகம் மந்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சரக்குகள், சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) மசோதா நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னணி புளூசிப் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது போன்றவற்றால் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது.

மும்பை பங்குச் சந்தையில், பொறியியல் சாதனம், உலோகம், எண்ணெய் அண்டு எரிவாயு உள்பட சில துறைகளின் குறியீட்டு எண்கள் வீழ்ந்தன. வாகனம், வங்கி, நுகர்வோர் சாதனம், மின்சாரம், ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்பு உள்பட பல துறைகளின் குறியீட்டு எண்கள் ஏற்றம் கண்டன.

ஐ.டி.சி.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி, ஐ.டி.சி., சன் பார்மா, பவர்கிரிட், டி.சி.எஸ்., கோல் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தன. எல் அண்டு டி, அதானி போர்ட்ஸ், டாட்டா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, லுப்பின், சிப்லா, இன்போசிஸ், டாட்டா மோட்டார்ஸ், கெயில் உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 184.29 புள்ளிகள் ஏற்றம் கண்டு 28,208.62 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 50.50 புள்ளிகள் உயர்ந்து 8,666.30 புள்ளிகளில் முடிவுற்றது.

Leave a Reply