- செய்திகள், மதுரை, மாவட்டச்செய்திகள்

தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதல்வர் வேட்பாளரை உறுதி செய்வோம்

மதுரை, மார்ச்.1-
தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளிடம் பேசி முதல்வர் வேட்பாளரை உறுதி செய்வோம் என்று பா.ஜனதா நிர்வாகி இல.கணேசன் கூறினார்.

கூட்டணி பேச்சுவார்த்தை

மதுரை சோழவந்தான் தொகுதியில் பா.ஜ.க.கட்சியின் செயற்குழு  கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க.வின் தேசிய தலைமை  செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சி  தமிழக சட்டசபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்னேற்பாடுகளை  செய்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலின் போது எங்களுடன் இணைந்து தேர்தலை  சந்தித்த தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கூட்டணியில்  நீடிக்கின்றன. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூட்டணி தொடர்பாக  அக்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

முதல்வர் வேட்பாளர்?

தி.மு.க. மற்றும்  அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 233 தொகுதிகளில் பா.ஜனதா ஏற்கனவே தேர்தல்  பணிகளை முடுக்கி விட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரிடம் இன்னும் ஓரிரு நாளில் பேச்சு வார்த்தை நடத்தி  கூட்டணி தொடர்பான அறிக்கை வெளியிடப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர்  வேட்பாளர் யாரென்பது குறித்து தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளிடம் பேச்சு  வார்த்தை நடத்தி உடன்பாடு காணப்படும்.
இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

Leave a Reply