- செய்திகள், மாவட்டச்செய்திகள்

தே.மு.தி.க.- த.மா.கா உடைய வைகோ தான் காரணம் மு.க.ஸ்டாலின் பேட்டி…

சென்னை, ஏப்.11-
தே.மு.தி.க.- த.மா.கா. உடைய வைகோதான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தேர்தல் பிரசாரம்

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மூன்றாவது நாளாக சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அ.தி.மு.க. ஆட்சியால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை விளக்கும் வகையில், “ஐந்தாண்டுகளாய் துருப்பிடித்துக் கிடக்கும் தமிழ்நாடு”, “சொன்னாங்களே, செஞ்சாங்களா ?”, “முடங்கிய அரசு, மூழ்கிய தமிழகம்”, ஆகிய தலைப்புகளில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தார்.

பிரச்சாரத்தின் இடையே மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின் தமிழ்நாட்டில் மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். தி.மு.க. எதை முன் வைத்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறது ?

பதில்:- 2011-ல் வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்து அதையெல்லாம் நிறைவேற்றவில்லையோ, அதேபோல இந்த தேர்தலிலும் நிறைவேற்ற முடியாத நிலையில்தான் அவர் வாக்குறுதிகளை அள்ளி வழங்க தொடங்கி இருக்கிறார். இன்னும் என்னென்ன வாக்குறுதிகளை சொல்லப் போகிறார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியத்தான் போகிறது. கருணாநிதியை பொறுத்தவரையில், ”சொன்னதைத்தான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார்”, என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும்.

வைகோதான் காரணம்

கேள்வி:- அறிவித்த எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டேன் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்:- அதற்கு பெயர்தான், “அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு”.

கேள்வி:- தே.மு.தி.க.வை தொடர்ந்து த.மா.கா.வில் இருந்தும் நிர்வாகிகள் வெளியேறுவதை எப்படி பார்க்கிறீர்கள் ?
பதில்:- அதை அங்கு போய்தான் கேட்க வேண்டும். ஏற்கனவே தே.மு.தி.க. அங்கு சென்று இணைந்ததும் உடைய ஆரம்பித்தது, இப்போது த.மா.கா. இணைந்ததும் அந்த கட்சியும் உடைய ஆரம்பித்துள்ளது. ஆனால் இதெல்லாம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.

ஆனால் அந்த வைகோ ஏதோ கருணாநிதியும், ஸ்டாலினும் திட்டமிட்டு, ஏதோ பல கோடி ரூபாய் கொடுத்து அந்த கட்சியை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறார். ஆக, தமா.கா.வாக இருந்தாலும், தே.மு.தி.க.வாக இருந்தாலும் அவற்றை உடைப்பதற்கு யார் காரணம் என்று கேட்டால், என்னை பொறுத்தவரையில் நான் வெளிப்படையாக சொல்கிறேன், வைகோதான் காரணம். இந்த கட்சிகளை எல்லாம் அங்கு கொண்டு சென்று சேர்க்காமல் இருந்தால், அவை உடைந்திருக்காது. எனவே அவர்தான் அவற்றை உடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply