- செய்திகள், மாவட்டச்செய்திகள்

தே.மு.தி.க. கட்சியில் இருந்து சந்திரகுமார் நீக்கத்துக்கு செயற்குழுவில் ஒப்புதல் விஜயகாந்தின் நடவடிக்கைக்கு பாராட்டு…

சென்னை, ஏப்.11-
தே.மு.தி.க.வில் இருந்து சந்திரகுமார் நீக்கத்துக்கு செயற்குழுவில் ஒப்புதல் அளித்து தீமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விஜயகாந்தின் நடவடிக்கைக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

தே.மு.தி.க. செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

விஜயகாந்துக்கு அதிகாரம்

* 09.01.2016 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், 2016 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரத்தையும், கழக நிறுவனத்தலைவரும், கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்துக்கு அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரு நல்ல ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் வகையில் தே.மு.தி.க. தலைமையில் ம.தி.மு.க., த.மா.கா., சி.பி.ஐ.(எம்), வி.சி.க, சி.பி.ஐ,  ஆகிய கட்சிகளுடன் ஒரு மெகா கூட்டணி அமைத்த தலைவர் விஜயகாந்துக்கு இச்செயற்குழு நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

சந்திரகுமார் நீக்கம்

* தே.மு.தி.க. துவங்கப்பட்டதன் நோக்கம் தமிழகத்தில் மலிந்து கிடக்கின்ற லஞ்சம், ஊழல், சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்ற மக்கள் விரோத செயல்களை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும், அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாறாக தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே தே.மு.தி.க.வை தலைவர் விஜயகாந்த் துவக்கினார்.

எதிர்வரும் 2016 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான அதிகாரத்தை பெரம்பலூரில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு தலைவர் விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கியது முதல், தொடர்ந்து நமது கழகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு வந்த வி.சி.சந்திரகுமார், 23.03.2016 அன்று மக்கள் நலக்கூட்டணி கட்சி தலைவர்கள் நம் தலைமை கழகத்திற்கு வந்து, தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு, தலைவர் விஜயகாந்தை தமிழக முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்கள்.

அன்றைய நிகழ்ச்சியில் வி.சி.சந்திரகுமார் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார். அதை தொடர்ந்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்களோடு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார்.  தலைமை கழகத்தில் தேர்தல் சம்பந்தமாக ஆலோசிப்பதற்காக, தலைமை கழக நிர்வாகிகளும், உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக கொள்கைபரப்பு செயலாளரான வி.சி.சந்திரகுமார், கழக துணைச்செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

விஜயகாந்துக்கு பாராட்டு

மாறாக கூட்டம் நடைபெற்றுகொண்டிருக்கும் போது வி.சி.சந்திரகுமார் நிருபர்களை சந்திப்பதாக தகவல் வந்தது. அப்போது வி.சி.சந்திரக்குமார் கழகத்தையும், கழகத்தலைவரையும், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி அவதூறான செய்திகளையும், பொய்யான தகவல்களையும் கழகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேட்டியளிப்பதை தொலைக்காட்சியில் கண்டோம்.

உடனடியாக அவரையும், அவருடன் சேர்ந்திருந்தவர்களையும் கழக பதிவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்  நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தமைக்கு இச்செயற்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது, மேலும் விரைந்து நடவடிக்கை எடுத்த உயர்மட்ட குழுவையும், தலைவர் விஜயகாந்தை பாராட்டுகிறது.

இவ்வாறு பல்பேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply