- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று சொல்வதா? கருணாநிதி குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா பதில்

சென்னை, ஏப்.19-

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சொல்லி கருணாநிதி பொய் பிரசாரம் செய்து வருகிறார் என்று ஜெயலலிதா பேசினார்.

காஞ்சியில் பிரசாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று காஞ்சிபுரம் அருகே வாரணவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சியின் வேட்பாளரையும் ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பசுமை வீட்டு

* நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தேர்தலின் போது உங்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை அளித்தேனோ, என்னென்ன திட்டங்களை தருவேன் என்று சொன்னேனோ, அதையெல்லாம் நிறைவேற்றித் தந்திருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் சொன்னதை செய்திருக்கிறேன்.  அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

* குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி விலையில்லாமல்  வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதன் பயனை நீங்கள் எல்லாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
* நவீன பசுமை வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தேன். இதன்படி கடந்த 5 ஆண்டுகளில் 5,879 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,79,954 பேருக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.  20,046 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

28 லட்சம் ஆடுகள்
* இருண்ட தமிழகம் ஒளி பெற வழிவகை செய்யப்படும் என்று நான் வாக்குறுதி அளித்து இருந்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்து திட்டங்களின் மூலம்  7,485.5 மெகாவாட் மின்சாரம் தமிழக மின் தொகுப்பில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனை.  இதன் காரணமாக தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

* வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி சென்ற தேர்தலின் போது என்னால் அளிக்கப்பட்டு இருந்தது.  இதன்படி, கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு பயனாளிக்கு  4 ஆடுகள் வீதம் 7 லட்சம்  பயனாளிகளுக்கு 927.75  கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

* இதே போன்று, 60 ஆயிரம் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். அந்தத் திட்டமும் நிறைவேற்றப்பட்டு விட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் 231.11 கோடி ரூபாய் செலவில் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மிக்ஸி, கிரைண்டர்

* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்படும்  45 நாட்களுக்கு, மீனவக் குடும்பத்திற்கான உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத மீனவக் குடும்பங்களுக்கு 4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

* தாய்மார்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவை வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

* காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

* முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நிலையான தீர்வு எட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததற்கிணங்க, அணையின் நீர்மட்டம் 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அணை வலுப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர் மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்.

திருமண உதவி

* கேபிள் டி.வி. தொழில் அரசுடைமையாக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி. இணைப்பு குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.  இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு அனைத்து மக்களுக்கும் மாதம் 70 ரூபாய் என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

* ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டங்களின் கீழ் 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன், தாலிக்கு தங்கம் வழங்கப்படும் என்றும்; பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவித் தொகை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 72 ஆயிரத்து 643 பெண்களுக்கு 2,537 கோடியே 74 லட்சம் ரூபாய் நிதியுதவியும், 2,844 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது.

அம்மா திட்டம்

இவையெல்லாம் நான் செய்வேன் என்று சொன்ன வாக்குறுதிகள். நான் சொன்னதைச் செய்தேன். இது மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.  இதுவரை சொன்னதை செய்வேன், செய்வதைத் தான் சொல்வேன் என்று சொல்லி வந்தேன்.  ஆனால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் சொல்லாத பவற்றையும் நான் செய்திருக்கிறேன்.  மக்களை நாடி அரசு என்பதற்கேற்ப அம்மா திட்டம் இன்று மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏழை மக்கள் மலிவு விலையில் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 530 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.  இதே போன்று, அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா குழந்தைகள் பரிசுப் பெட்டகம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சொன்னதை மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்யும் அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

பொய் பிரசாரம்

இந்த சாதனைகளையெல்லாம் கண்டு பொறுக்க முடியாத தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.மு.க.வினரும் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.  நம்முடைய சாதனைகளை எல்லாம் கண்டு மக்கள் பாராட்டுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் கருணாநிதியும், தி.மு.க.வினரும் வேண்டுமென்றே 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மின்வெட்டு உள்ளது என்று  தி.மு.க.வினர் சொல்வது பொய் பிரசாரம் என்பது எல்லோருக்கும் தெரியும். எந்த பொய்யையும் துணிந்து சொல்லலாம் என்று தி.மு.க.வினர் நினைக்கிறார்கள்.  வாய்க்கு வந்ததைச் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என தி.மு.க.வினர்  நினைக்கின்றனர்.  மின்வெட்டே இல்லாத போது மின் வெட்டு இருக்கிறது என்று பிரசாரம் செய்வது எப்படிப்பட்ட கேலிக் கூத்து?  வீடுகளுக்கு மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளிலும் கூட எந்தவித மின் வெட்டும் இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.

மின் திருட்டுக்கள்

அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் 4 வருடத்திற்குள் மும்முனை இணைப்பு வழங்கி மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழி காணப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று என்று தி.மு.க.வினர் கேட்கிறார்கள், கருணாநிதியும் கேட்கிறார்.  அதற்கு என்னுடைய பதில், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

அதைப்போலவே, மின் திருட்டை தடுக்க ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மூலம்  குழுக்கள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்களே, அது என்னவாயிற்று என்று தி.மு.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள். கருணாநிதி கேள்வி எழுப்புகிறார்.  அதற்கு என்னுடைய பதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள்  மூலம் 40 குழுக்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 64,428 மின் திருட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு, திருட்டில் ஈடுபட்டோர் இடமிருந்து 117 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது  என்பதுதான் உண்மை.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

Leave a Reply