- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் ராஜேஷ் லக்கானி இன்று டெல்லி பயணம்

சென்னை மார்ச் 31-
தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று டெல்லி செல்கிறார்.

3 நாட்களில் பதில்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிறுதாவூரில் உள்ள  ஒரு பங்களாவில்  கண்டெய்னர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து ம.தி.மு.க. சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இதுதொடர்பாக இன்று (நேற்று) தி.மு.க.வும் புகார் மனுவை அளித்துள்ளது. எந்த புகார் மனு அளித்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். புகாரில் உண்மை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற புகார்கள் நேரடியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்படுகிறது. அங்கிருந்து, என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு எனக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல், அங்கிருந்து எனக்கு அனுப்பப்படும் புகார்களுக்கு 3 நாட்களுக்குள் நான் பதிலளிக்க வேண்டும். அதன்படி, தேர்தல் ஆணையத்திற்கு 3 நாட்களுக்குள் பதில் அளிப்பேன்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பணிகள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை (இன்று) டெல்லியில் நடக்கிறது.  எனவே, 31-ந் தேதி (இன்று) நான் டெல்லிக்கு செல்கிறேன்.
கலெக்டரிடம் விளக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வீட்டில் இருந்து பண மூட்டை எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு, அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அந்த மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். திருச்சி பொன்மலை அருகே பணத்தைக் கட்ட பயன்படுத்தப்படும் பேப்பர்கள் சிதறிக் கிடந்த சம்பவம் தொடர்பாகவும் அந்த மாவட்ட கலெக்டரிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன். மருந்து கொள்முதல், அலுவலர்களின் பதவி உயர்வு போன்ற விவகாரங்கள் தொடர்பாக நாளொன்றுக்கு தமிழக அரசிடம் நூறுக்கும் மேற்பட்ட கோப்புகள் வருகின்றன. சில விஷயங்களில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு கோரப்பட்டுள்ளது. இதுபற்றி தலைமைச் செயலாளர் ஞானதேசிகனுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறேன்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

Leave a Reply