- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தேர்தல் நெருங்கி வருவதால் அரைகுறையாக திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்

சென்னை, மார்ச்.1-
தேர்தல் நெருங்கி வருவதால் அரைகுறையாக திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:–-
மகளிருக்கு செல்போன்…
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இப்போது தேர்தல் வரப்போகிறது என்று தெரிந்து வழக்கம் போல் 3 பேரை அழைத்து செல்போன் வழங்கியிருக்கிறார். அலைபேசி வழங்கும் அறிவிப்பை வெளியிட்ட போதே அந்த அலைபேசிக்கு சிம் கார்டு யார் கொடுப்பது, அதை ரீ-சார்ஜ் செய்ய கட்டணம் யார் செலுத்துவது? என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு இதுவரை பதில் இல்லை.
புதிய கலாசாரம்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அலைபேசி, மூத்த குடி மகன்களுக்கு பஸ் பாஸ், சீருடை பணியாளருக்கு சொந்த வீடு என்று அனைத்து அறிவிப்புகளையும் அரை மணி நேர முதல்வர் போலவே அரை குறையாக கண்துடைப்புக்காக நிறைவேற்றும் புதிய கலாச்சாரத்தை புகுத்தி விட்டார். சட்டமன்றத்தில் மேற்கொள்ளப்படும் அறிவிப்புகளின் புனிதத்தன்மையை கெடுத்து அரசு பெயரில் வரும் அறிவிப்புகளையே கேலி கூத்தாக்கி விட்டார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply