- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள்-ரூ.1 லட்சம் திருட்டு…

திருச்சி,மார்ச்.1-
திருச்சியில் தொழில் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தொழில் அதிபர்
திருச்சி கருமண்டபம் ஜெய நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அமல் வில்லியம் (வயது 36). தொழில் அதிபரான இவர் தனியார் பள்ளிகளில் நோட்டு-புத்தகங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவி ஆரோக்கியமேரி மற்றும் 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு சென்று இருந்தார்.

அதிகாலையில் அமல் வில்லியத்தின் நண்பரான ஆசிரியர் கென்னடி நடைபயிற்சி சென்றார். அப்போது அமல் வில்லியத்தின் வீட்டு கதவு திறந்து கிடந்ததை அவர் பார்த்தார். குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்த நண்பர் மீண்டும் வீடு திரும்பி இருப்பார் என நினைத்து கென்னடியும் சென்று விட்டார்.

30 பவுன் நகைகள்-ரூ.1 லட்சம் திருட்டு

சிறிது நேரம் கழித்து கென்னடி மீண்டும் அந்த வழியாக சென்றார். அப்போதும் அமல் வில்லியம் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அமல் வில்லியத்தின் வீட்டு வாசலில் நின்று கொண்டு அவரை அழைத்தார். ஆனால் வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு வீட்டின் ‘கிரில் கேட்’டில் இருந்த பூட்டுகள் உடைந்து கிடந்தது.
வீட்டின் உள்பக்கம் இருந்த கதவின் தாழ்ப்பாள் நெம்பி உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அமல் வில்லியத்துக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த அவர் புதுக்கோட்டையில் இருந்து தனது மனைவியுடன் பதறியடித்து கொண்டு வீடு திரும்பினார். அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்து இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
வலை வீச்சு
அமல் வில்லியம் குடும்பத்துடன் ஊருக்கு சென்று விட்டதை தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவின் மேல் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசாருக்கு அமல் வில்லியம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கொள்ளை நடந்த வீட்டுக்கு போலீசார் வந்து பார்வையிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்களிடம் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Leave a Reply