- உலகச்செய்திகள், செய்திகள், வணிகம்

தொடர்ந்து 3 வாரமாக சென்ற வாரத்திலும்கரடியை `வேட்டையாடிய காளை

புதுடெல்லி, ஜன.3:-
தொடர்ந்து 3-வது வாரமாக சென்ற வாரத்திலும் பங்கு வர்த்தகம் முன்னேற்றம் கண்டது. அந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1.21 சதவீதமும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 1.30 சதவீதமும் உயர்ந்தன.
நம்பிக்கை
ஜி.எஸ்.டி., நேரடி வரிகள் சீரமைப்பு, தொழில் தொடங்குவதை எளிதாக்குவது போன்றவற்றுக்கு இந்த ஆண்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இது முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. மேலும், பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை குறைவாக இருந்ததால் அதில் முதலீடு  செய்வதில் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் அந்த வாரத்தில் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட், மினசாரம், வாகனம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மருந்து, வங்கி ஆகிய துறைகளின் குறியீட்டு எண்கள் உயர்ந்தன.
டாட்டா மோட்டார்ஸ்
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் டாட்டா மோட்டார்ஸ், என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ், லுப்பின், சன்பார்மா உள்பட பல 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தன. அதேவேளையில் டாட்டா ஸ்டீல், பி.எச்.இ.எல். உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை சரிந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அந்த வாரத்தில் ஒட்டு மொத்த அளவில்  சென்செக்ஸ் 312.19 புள்ளிகள் அதிகரித்து 26,150.80 புள்ளிகளில் முடிவுற்றது. நிப்டி 102.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 7,963.20 புள்ளிகளில் நிலை கொண்டது.
பாக்ஸ்
தொடர் சரிவில் ரூபாய் மதிப்பு
தொடர்ந்து 3-வது வாரமாக சென்ற வாரத்திலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு கண்டது. அந்த வாரத்தில் ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைந்து 66.14-ஆக வீழ்ச்சி கண்டது. அன்னிய முதலீடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் வங்கிகள், ஏற்றுமதியாளர்கள் டாலரை அதிக அளவில் விற்பனை செய்ததே இதற்கு காரணம்.

Leave a Reply