- செய்திகள், விளையாட்டு

தெற்காசிய விளையாட்டுப் போட்டி நீச்சலில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்

தெற்காசிய விளையாட்டுப் போடியில் நேற்று நடைபெற்ற நீச்சல் போட்டியின் 7 பிரிவுகளில் இந்தியா தங்கம் வென்றது.

முன்னதாக கடந்த மூன்று நாள்களாக இந்தியாவுக்கு கடுமையான போட்டியாக இலங்கை திகழ்ந்த நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணி 7 தங்கங்களை வென்றது.

ஆடவர் 400 மீட்டர் பிரீ ஸ்டைல் போட்டியில் இந்தியாவின் சௌரவ் சங்வேகர் புதிய சாதனை படைத்தார். இவர் இந்த தூரத்தை 3 நிமிஷம் 58.84 விநாடிகளில் கடந்தார்.

மகளிர் 400 மீட்டர் பிரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் மாள்விகா தங்கம் வென்றார். இவர் இந்த தூரத்தை 4 நிமிஷம் 30.08 விநாடிகளில் கடந்தார். இது புதிய சாதனையாகும்.

ஆடவர் 200 மீட்டர் பட்டர் பிளை பிரிவில் நீச்சலில் நேற்றைய போட்டியின் 3-வது தங்கத்தை வென்றார் சஜன் பிரகாஷ், தனிப்பட்ட முறையில் இது அவருக்கு 4-வது தங்கமாகும். இவர் இந்த தூரத்தை 2 நிமிஷம் 03.02 விநாடிகளில் கடந்தார். இது அவருக்கு புதிய சாதனையாகும்.

மகளிர் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் டாமினி கௌட தங்கம் வென்றார். இவர் இந்த தூரத்தை 2 நிமிஷம் 21.12 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

ஆடவர் 50 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவில் மாது புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். இவர் 26.86 விநாடிகளில் தங்கம் வென்றார்.

மேலும் ஆடவர் மற்றும் மகளிர் 4–200 மீட்டர் பிரீ ஸ்டைல் போட்டிகளில் இந்திய அணிகளே தங்கம் வென்றன.

மேலும் ஆடவர் 400 மீட்டர் பிரீ ஸ்டைல் போட்டியில் இந்தியாவின் சஜன் பிரகாஷும் மகளிர் 400 மீட்டர் பிரீ ஸ்டைல் போட்டியில் ஷிவாணியும் ஆடவருக்கான 50 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவில் அரவிந்தும் மகளிருக்கான 50 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவில் மனா படேலும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

Leave a Reply