- சினிமா, செய்திகள்

தெறி விமர்சனம்

அதிரடியில் மட்டுமின்றி பாசப்பிணைப்பிலும் தெறிக்கிற மாதிரியான ஒரு படம். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பிரமிக்க வைக்கும் இன்னொரு பிரமாண்ட படம்.

ஐ.டி. பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அமைச்சரின் மகனை துணை கமிஷனர் விஜய் பரலோகம் அனுப்பி வைக்கிறார். பதிலுக்கு அமைச்சர் விஜய்யின் மனைவியையும் அம்மாவையும் கொன்று கணக்கை சமன் செய்கிறார். மகளுடன் உயிர் தப்பும் விஜய் அமைச்சருடன் ஆடும் மறைமுக ஆட்டமே ஆக்ரோஷம் தெறிக்கும் அதிரடித் தெறி. இந்த மசாலா கதையை அப்பா-மகள் ெசன்டிமென்ட்டில் அழகு மிளர தந்திருப்பதற்காகவே இயக்குனருக்கு ஒரு ஷொட்டு.

கேரளாவில் பேக்கிரி வைத்திருக்கும் ஜோசப் குருவில்லாவாக ஐந்து வயது குழந்தைக்கு அப்பாவாக  விஜய் அறிமுகமாகும்போதே பின்னணியில் ஏதோ பெரிசாய் சொல்லப் போகிறார்கள் என்பது புரிந்து போகிறது. போலீஸ் நிலையத்தில் ரவுடியுடனான கேசை விஜய் வாபஸ் வாங்கும் இடத்தில் போலீஸ்அதிகாரி விஜய்யை சந்தேகப்படும் இடத்தில் தொடங்கி அதிரடியை தெறிக்க விடுகிறார் இயக்குனர். ஜோசப் குருவில்லா யார்? அவர் ஏன் மகளுடன் கேரளா வரவேண்டும்? மகள் இவருடன் என்றால் மனைவி எங்கே? எதிர்பார்ப்புக்குரிய கேள்விக்கு சுவாரசியமும் நெகிழ்வுமாக ஜெட் வேகத்தில் விரிகிற பிளாஷ்பேக் ரசிகர்களை பரபரவென்று வைத்திருக்கிறது.

பொறுப்புள்ள போலீஸ் அதிகாரி, மனைவியின் பாசக் கணவன், அம்மாவுக்கு அன்பான மகன் என நடிப்பில் விஜய்க்கு செம தீனி. மருத்துவனையில் சமந்தாவுடனான அந்த முதல் சந்திப்பில் ஒரு அழகான காதல் கட்டவிழ்கிற விந்தை அற்புதம். போலீஸ் மாப்பிள்ளை வேண்டாம் என்றிருக்கும் சமந்தாவின் அப்பாவை ஓட்டலில் கன்வின்ஸ் செய்கிற இடத்தில்  நவரசமும் கலந்த அதிசயமாய் விஜய்யை ரசிக்க முடிகிறது. மகள் நைனிகாவிடம் மொக்ைக வாங்குகிற ஒவ்வொரு இடத்திலும் ரசனை..ரசனை… சுனைனாவை பெண் பார்க்கப் போன இடத்தில் அம்மா ராதிகாவை கலாய்ப்பது, ரவுடி மீது பகார் கொடுத்த எமி டீச்சர் மீது ஆவேசப்படுவது என நடிக்கக் கிடைத்த அதனை காட்சிகளிலும் சிக்சர் விளாசுகிறார்.

சமந்தா இந்தப் படத்தில் இன்னும் அழகு. நடிப்பும் தான். பார்த்ததும் காதல் வந்ததற்கு அவர் சொல்லும் காரணம் தனிஅழகு. அப்பாவின் கட்டாயத்துக்காக மறந்து விடுவோம் என்று சொல்லி விட்டு மறுகணமே வந்து விஜய்யை தாவியணைப்பது காதலை கவுரவிக்கும் இடம். நைனிகாவின் பள்ளி டீச்சராக எமி ஜாக்சன் கிடைத்த கொஞ்ச நேரத்திலும் தன் இருப்பை பதிவு செய்து விடுகிறார். விஜய்யின் மகளாக வரும் நைனிகா மனதை அள்ளிக்கொள்கிறாள். டீச்சரிடமே உங்களுக்கு லவ் பண்ற ஐடியா இருக்கா? என்று கேட்கிற சுட்டிப் பெண்ணை யாருக்குத் தான் பிடிக்காது?

அமைச்சராக சைலண்ட் வில்லனாக இயக்குனர் மகேந்திரன் நடிப்புக்கு நல்வரவு. விஜய்யை இவர் சீண்டும் ஒவ்வொரு இடங்களிலும் கண்களில் தெறிக்கிறது, குரோதம்.

விஜய்யின் அம்மாவாக ராதிகா நடிப்பில் சீனியர் என்பதை நிரூபிக்கிறார். விஜய்யின் உதவியாளராக வரும் `நான் கடவுள்' ராஜேந்திரன் சிரிப்புக்கு உத்தரவாதம்.

ஜீ.வி.பிரகாஷின் இசையில் `ஜித்து ஜில்லாடி' ஆட வைக்கிறது. ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு கலர்புல். அதிகார பலத்துடன்மோதும சுனாமி போலீஸ் அதிகாரி கதைக்குள் அழகான குடும்பம், அன்பான மகள் என்ற பூந்தென்றலையும் கோர்த்த விதத்தில் இயக்குனர் அட்லி நிஜமாகவே ஜித்து ஜில்லாடி தான். அழகம்பெருமாளின் கோர மரணத்தை பத்து ரூபாய் சாக்லெட்டை சிரித்தபடி சுவைக்கிற சிறுவனை காட்டுகிற அந்த ஒரு காட்சிக்காகவே இயக்குனருக்கு கொடுக்கலாம் மணக்கும் பூங்கொத்து.

Leave a Reply