- செய்திகள்

தூத்துக்குடி மிகவும் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது…

தூத்துக்குடி, ஜூலை.27-

தூத்துக்குடியில் மிகவும் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

பேராலய திருவிழா

தூத்துக்குடியில் பழமை வாய்ந்த ஆலயமாக பனிமய மாதா ஆலயம் விளங்கி வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா  கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு 434-வது ஆண்டு திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து காணிக்கை பவனி நடந்தது.

கொடியேற்றம்

நேற்று காலை பனிமயமாதா கோவிலில் சிறப்பு திருப்பலியுடன் திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி நேற்று காலையில்  கூட்டு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடி ஆலய வளாகத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆலயம் முன் உள்ள கொடி மரத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் கொடியை ஏற்றினார்.

இதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் உலக சமாதானத்தை குறிக்கும் வகையில் ஏராளமான புறாக்களை பறக்க விட்டனர். அப்போது பழைய துறைமுகத்தில் இழுவை கப்பலிலிருந்து சங்கு ஒலி எழுப்பப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக கொண்டு வந்திருந்த பழம், பால் உள்ளிட்டவற்றை கொடிமரத்தில் ஊற்றி பின்னர் பக்தர்களுக்கு கொடுத்தனர்.

கொடியேற்று விழாவில் கீதாஜீவன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. சி.த.செல்லப்பாண்டியன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. அடுத்த மாதம் 5-ந் தேதி அலங்கரிக்கப்பட்ட தேரில் பனிமயமாதாவின் திருவுருவ பவனி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

படம் உள்ளது
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் நேற்று காலை கொடியேற்று விழா நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply