- உலகச்செய்திகள், செய்திகள்

துருக்கி தூதரகம் தரைமட்டம் ஈராக்கில் அமெரிக்கா குண்டுமழை

வாஷிங்டன், ஏப். 7:- ஈராக்கில் அமெரிக்க விமானப் படை நடத்திய தாக்குதலில், துருக்கி முன்னாள் துணை தூதரகம் தரைமட்டம் ஆனது.

மொசூல் நகரம்

ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய நகரமாக மொசூல் உள்ளது. மேலும், குர்து இன மக்களின் தலைநகரமான எர்பிலுக்கு, 80 கிலோ மீட்டர் வடக்கில், மொசூல் அமைந்துள்ளது. இதனை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதனை மீட்பதற்காக, சிரிய ராணுவம், அமெரிக்க கூட்டுப்படைகள் உள்ளிட்டவை தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த திங்களன்று, மொசூல் நகரில் உள்ள தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், துருக்கி முன்னாள் துணை தூதரகம் தரைமட்டம் ஆக்கப்பட்டது.

தலைமை அலுவலகம்

இதுகுறித்து, அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜெப் டேவிஸ் கூறியதாவது:- மொசூல் நகரில் உள்ள துருக்கி முன்னாள் துணை தூதரகத்தை குறி வைத்து, கடந்த திங்களன்று தாக்குதல் நடத்தினோம். துருக்கி அரசிடம் அனுமதி பெற்ற பின்னர்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தூதரகத்தை, ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய தலைவர்கள், தங்களது தலைமை அலுவலகமாக பயன்படுத்தி வந்தனர். அவர்கள் ஓய்வு எடுப்பதற்கும், அபாயகரமான ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதற்கும் இந்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. தற்போது அந்த துணை தூதரகம் தரைமட்டம் ஆக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply