- உலகச்செய்திகள், செய்திகள், மாவட்டச்செய்திகள்

துப்பாக்கிச் சூடு; மின் கம்பி அறுந்து விழுந்து 11 பேர் பலி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்களை கலைக்க…

தின்சுகியா (அசாம்), ஏப்.12-

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்களை கலைப்பதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், மின்கம்பி அறுந்து விழுந்து 11 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

முற்றுகை போராட்டம்

அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பங்கீரி என்ற இடத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இரட்டைக் கொலையில் தொடர்புடையதாக கூறி, அந்த பகுதியை சேர்ந்த சிலரை பங்கீரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள்.

துப்பாக்கிச்சூட்டில் விபரீதம்

அவர்களை கலைப்பதற்காக போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே போராட்டம் நடத்தியவர்கள் சிதறி ஓடினார்கள்.

துப்பாக்கிச்சூட்டில் அந்த பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. தப்பி ஓடியவர்கள் மீது மின் கம்பி விழுந்ததால், மின்சாரம் பாய்ந்து அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

11 பேர் பலி

அவர்களில் 11 பேர், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானார்கள். 20 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் அந்த பகுதிக்கு மத்திய போலீஸ் படை பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

போராட்டம் நடத்தியவர்கள், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் கொந்தளிப்புடன் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். உயர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

போராட்டம் ஏன்?

3 நாட்களுக்கு முன்பாக பங்கீரி பகுதியை சேர்ந்த ஒருவரையும் அவருடைய மகன் மற்றும் மகள் ஆகிய மூன்று பேரையும் அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றனர். அவர்களில் மகன் மட்டும் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். மற்ற இருவரையும் அவர்கள் கொலை செய்து விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த துயர சம்பவத்தில்தான் 11 பேர் பலியாகிவிட்டனர்.

Leave a Reply